×

தனியார் ஆக்கிரமிப்பை கண்டித்து சாலை பணியை நிறுத்திய பொதுமக்கள் காரைக்குடியில் பரபரப்பு

காரைக்குடி, பிப்.20: பனந்தோப்பு பகுதியில் தனி நபர் சாலையை ஆக்கிரமித்துள்ளதை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை பணியை நிறுத்தி மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் பாதாளசாக்கடை திட்ட பணிகள் நடந்தது வருகிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட இப்பணி ஆமை வேகத்தில் நடப்பதால் மக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். பல பகுதிகளில் பாதாளசாக்கடை திட்டத்துக்கு தோண்டிய பள்ளத்தில் மக்கள் விழுவது வாடிக்கையாகி வருகிறது. பல்வேறு இடங்களில் பணியை முழுமையாக முடிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதால் சாலை அமைக்க முடியாமல் உள்ளது. பணி முடிந்த ஒருசில பகுதிகளில் நகராட்சி சார்பில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் சந்தைபேட்டை பனந்தோப்பு பகுதியில் பாதாளசாக்கடை திட்டம் முடிந்து சாலை அமைக்கும் பணி நேற்று துவங்கியது. இப்பகுதியில் தனி நபர் ஒருவர் தனது வீட்டின் முகப்பு மற்றும் செப்டிக் டேங்கை சாலையை ஆக்கிரமித்து அமைத்துள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனால் சாலை ஒரு இடத்தில் மட்டும் குறுகலாக அமைய வாய்ப்புள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளாததால் நேற்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் திடீர் என சாலை பணியை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக பணியாளர்கள் தெரிவித்ததன் படி கலைந்து சென்றனர். அப்பகுதி மக்கள் கூறுகையில், பாதாளசாக்கடை திட்ட பணியால் பல சிரமங்கள் ஏற்பட்டது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சாலை பணிகள் நடக்கிறது. அதிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் பணியை முடிக்க நினைக்கின்றனர். சாலை ஆக்கிரமித்துள்ளவரை அகற்ற கூறினால் யாரிடம் வேண்டும் என்றாலும் புகார் தெரிவித்துக் கொள்ளுங்கள்; என்னை ஒன்றும் செய்ய முடியாது என கூறுகிறார். ஆக்கிரமிப்பை அகற்றாமல் சாலை பணியை தொடரவிடமாட்டோம். இதேநிலை தொடர்ந்தால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றனர்.

Tags : Civilians ,
× RELATED சிறுத்தை நடமாட்டம்: மக்களுக்கு வனத்துறை கோரிக்கை