×

பஸ் நிலையத்திற்கு வராமல் இரவில் நடுவழியில் இறக்கி விடப்படும் பயணிகள்

ஆர்.எஸ்.மங்கலம், பிப்.20:  ஆர்.எஸ்.மங்கலத்தை சுற்றிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும், வெளிமாவட்டங்களில் தொழில் ரீதியாகவும், வேலை வாய்ப்புக்காகவும் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவமனைகளோ இல்லை.  இந்த ஊருக்கு  70க்கும் மேற்பட்ட  பேருந்துகள் பஸ் நிலையத்துக்கு வந்து செல்கின்றன. பகல் நேரங்களில் அனைத்து பேருந்துகளும் பஸ் நிலையத்திற்கு வந்து செல்வது வழக்கமாக உள்ளது. ஆனால் இரவு நேரங்களில் பஸ் நிலையத்திற்கு வராமல் பெரும்பாலான பேருந்துகள் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று விடுகிறது. பயணிகளை இரவு நேரங்களில் சுமார் 3 கி.மீ தூரத்திற்கு முன்ேப திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இறக்கி விட்டு செல்கின்றனர். இதனால் கர்ப்பிணி பெண்கள், வயதான முதியோர்கள்  குழந்தைகள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இரவு நேரங்களில் இந்த பகுதியில் இறங்கி நடந்து செல்வதும் பாதுகாப்பற்றதாக கருதி பயணிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சம்மந்தப்பட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுத்து இரவு நேரங்களில் அனைத்து பேருந்துகளும் ஆர்.எஸ்.மங்கலம் ஊருக்குள் வந்து செல்லுமாறு நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து தனலெட்சுமி கூறுகையில், ‘‘இரவு நேரங்களில் வெளியூர்களுக்கு சென்று திரும்பும் பொதுமக்களை தேசிய நெடுஞ்சாலையிலேயே இறக்கி விட்டு சென்று விடுகிறார்கள். இங்கிருந்து வீடுகளுக்கு செல்வது மிகுந்த பயமாக உள்ளது. காரணம் சில நேரங்களில் தெருவிளக்குகள் கூட இல்லாமல் கரும் இருட்டாக உள்ளது. அவ்வாறான நேரங்களில் என்னை போன்ற பெண்கள் குழந்தைகளுடன் வருவதற்கு அச்சமாக உள்ளது. ஆங்காங்கே வழிப்பறி மற்றும் திருடு நடைபெறும் சூழலில் பகல் நேரங்களில், ஊருக்குள் வரும் பஸ் இரவு நேரங்களில் ஊருக்குள் வர மறுப்பது ஏன் என ஒன்றும் புரியவில்லை. பல நேரங்களில் பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் பயணிகள் வாக்குவாதம் செய்ய வேண்டிய சூழல் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களாகிய எங்களின் நலன் கருதி கெலக்டர் உரிய நடவடிக்கை எடுத்து அனைத்து பேருந்துகளும் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும்’’என்றார்.

Tags : Passengers ,bus station ,
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...