×

63 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கும் நூலகம் உட்கார இடமின்றி வாசகர்கள் தவிப்பு

சாயல்குடி, பிப். 20:  முதுகுளத்தூரில் இயங்கி வரும் அரசு நூலகத்திற்கு 63 வருடமாக சொந்த கட்டிடம் இல்லாததால், அடிக்கடி இடம் மாறும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் வட்டார நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதுகுளத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. 10க்கும் மேற்பட்ட பள்ளி,  இரண்டு கல்லூரிகள், ஐ.டி.ஐ உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஒன்றியத்திலுள்ள 48 பஞ்சாயத்துகளின் தலைநகராகவும் உள்ளது. பொதுமக்கள். இளைஞர்கள், மாணவர்களின் நலனுக்காக முதுகுளத்தூரில் 1957ல் அரசு வட்டார பொது நூலகம் அமைக்கப்பட்டது. 63 வருடங்களாக நிரந்தரமான சொந்த கட்டிடம் இல்லாததால், ஆண்டுக்காண்டு ஒவ்வொரு இடத்திற்கு மாறும் நிலை உள்ளது.

கடந்த மாதம், முதுகுளத்தூர், கமுதி சாலையிலுள்ள தனியார் வாடகை வீட்டில் வட்டார நூலகம் இயங்கி வந்தது. இதனை முதுகுளத்தூர் பேரூராட்சியில் குடியிருப்போர், சுற்றியுள்ள கிராமத்தினர் பயன்படுத்தி வந்தனர். 100க்கும் மேற்பட்டவர்கள் நிரந்தர வாசகர்களாக இருந்தும், நூலகத்தில் போதிய வசதியின்றி 10க்கும் குறைவானவர்களை வந்து சென்றனர். இளைஞர்கள் அரசு தேர்வுகளுக்கு படிப்பதற்கு மற்றும் உயர்கல்விக்கு தேவையான புத்தகங்கள், குறிப்புகளை எடுப்பதற்கும் பயன்படுத்த முடியாமல் பரிதவித்தனர். நூலகம் இருந்த அந்த வாடகை வீடு சிறியதாக இருந்ததால் அதிகமாக இருக்கும் புத்தகங்களை வைக்க இடம் இல்லாமல் அறைகளுக்குள் குவித்து வைத்தனர்.

தேவைப்படும் புத்தகத்தை தேடுவதற்கு சிரமம்பட்டு தேடும் நிலை இருந்தது. மேலும் வாசகர்கள் உட்கார்ந்து படிப்பதற்கு இருக்கை வசதி உள்ளிட்ட அடிப்படை வசிகள் இல்லாமல் சிரமப்பட்டு வந்ததாக வாசகர்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். இதனால் கடந்த வாரம் தேரிருவேலி சாலையிலுள்ள கிழக்கு தெரு வாடகை வீட்டில் தற்போது நூலகம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதுபோன்று அடிக்கடி இடத்தை மாற்றி வருவதால் நூலகத்தை தேடி அலையும் நிலை உள்ளது. மேலும் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருப்பதால் போக்குவரத்து இன்றி நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே வட்டார நூலகத்திற்கு முதுகுளத்தூரில் அரசு சார்பில் புதிய கட்டிடம் கட்டவேண்டும் என பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : library ,
× RELATED திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குரூப்...