×

400 கொசு ஒழிப்பு பணியாளர் திடீர் நீக்கம் மீண்டும் பணி வழங்க கோரி எம்பி தலைமையில் மனு

சேலம், பிப்.20: சேலத்தில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், மீண்டும் பணி வழங்க வலியுறுத்தியும், சேலம் எம்பி பார்த்திபன் தலைமையில் பணியாளர்கள் கலெக்டர் அலுலகத்தில் மனு அளித்தனர்.
சேலம் மாவட்டத்தில் கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் கடந்த 2006ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ஆரம்ப காலத்தில் தினக்கூலியாக ₹ 55 வழங்கப்பட்டது. அதன் பின்னர் ₹ 387 வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் கடந்த 14 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்றுமுன்தினம் எவ்வித முன்அறிவிப்பும் இன்றி 400 கொசு ஒழிப்பு பணியாளர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சேலம் எம்பி பார்த்திபன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தவர்கள், மீண்டும் தங்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.இது தொடர்பாக அவர்கள் கொடுத்துள்ள மனுவில், ‘‘சேலம் மாவட்டத்தில்  20 ஒன்றியங்களில் 800 கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு ஒன்றியங்களிலும் தலா 20 பேர் என்ற வகையில் 400 பேரை பணிநீக்கம் செய்துள்ளனர்.  சிக்குன் குன்யா, பன்றி காய்ச்சல், மலேரியா, டெங்கு போன்ற நோய்களை கட்டுப்படுத்தி சிறப்பாக பணியாற்றி உள்ளோம். எங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்,’’ என்று மனுவில் தெரிவித்துள்ளனர். இது குறித்து பார்த்திபன் எம்பி கூறுகையில், ‘‘பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பதிலாக அதிமுக அரசு வேறு நபர்களை நியமிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது சம்பந்தமாக கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். அவர் இந்த பிரச்னை சம்பந்தமாக என்னுடைய பார்வைக்கு எவ்வித தகவலும் வரவில்லை என்றும், மனு மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். பாதிக்கப்பட்ட கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கவில்லை என்றால் அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி கலெக்டர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்,’’ என்றார்.

Tags :
× RELATED கணேசமூர்த்தி எம்பி மறைவு: ஈஸ்வரன் எம்எல்ஏ இரங்கல்