×

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனுமதி பெறாத மதுபான கடைகள் திடீர் மாயம்

நாமக்கல், பிப்.20:  நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானகடைகளை விட சந்துகடைகள் (அனுமதியில்லாத மதுக்கடைகள்) கிராமப்புறம், நகர்புறங்களில் அதிகமாக செயல்பட்டு வருகிறது. டாஸ்மாக் மாவட்ட மேலாளர், மதுவிலக்கு பிரிவு உயர் அதிகாரிகள், உள்ளூர் போலீசார் என அனைவருக்கும் தெரிந்தே இந்த சந்துகடைகள் செயல்பட்டு வருகிறது. நாமக்கல்லில் டிஎஸ்பி அலுவலகம் அருகில் கூட சந்துகடை இயங்கியது. இந்த கடைகளை போலீசார் திடீரென மூடுவதும், பின்னர் கண்டும்காணாமல் இருப்பதும் தொடர்ந்து வந்தது.அரசு மதுபான கடைகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளிக்கும் போது, அதை பெயர் அளவுக்கு தான் மாவட்ட காவல்துறை செயல்படுத்தி வந்தது. மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கும் நாளில் அனைத்து பார்களிலும் காலை முதல் இரவு வரை கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படும். சந்துகடைகளை மூடக்கோரி பொதுமக்கள் மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கும், கலெக்டர் அலுவலகத்துக்கும்  புகார் அளித்து, அளித்து ஓய்ந்து போய்விட்டனர். இருப்பினும் சந்துகடைகளில் மதுபான விற்பனை தொடர்ந்துவந்தது.

இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட எஸ்பி அருளரசு, கடந்த வாரம் ஓபன் மைக்கில், மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாருக்கும் எச்சரிக்கை விடுத்தார். சந்துகடைகள் எங்காவது இருந்தால் அந்த காவல்நிலைய அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.அதைத்தொடர்ந்து மாவட்டத்தில் இயங்கி வந்த 100க்கும் மேற்பட்ட சந்துகடைகள் தற்போது திடீரென காணாமல் போய்விட்டன. மேலும் சந்துகடைகளுக்கு துணை போன போலீஸ் அதிகாரிகள் மீதும் மாவட்ட எஸ்பி அருளரசு நடவடிக்கை எடுத்து அவர்களை இடமாற்றம் செய்து வருகிறார்.அனுமதி பெறாத சந்துகடைகள் ஆண்டுகணக்கில் தொடர்ந்து இயங்கி வந்தாலும் எஸ்பியின் நடவடிக்கையால்  தற்போது தற்காலிகமாக சந்துகடைகளின் ஆதிக்கம் குறைந்துவிட்டது. இதனால் அரசு மதுக்கடை விற்பனையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சந்துகடையை நடத்துபவர்கள் டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் தனது செல்வாக்கை பயன்படுத்தி, இரவு 9.45 மணிக்கு எல்லாம் அரசு மதுக்கடையை மூடிவிடவேண்டும் என நெருக்கடி கொடுத்தார்கள். அதன் படி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுமதுக்கடைகளும் இரவில் முன்னதாகவே மூடப்பட்டு வந்தது. தற்போது சந்துகடை தொந்தரவு குறைந்துள்ளதால், அரசு மதுக்கடைகளில் விற்பனை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.


Tags : liquor shops ,district ,
× RELATED மலை மாவட்ட சிறு விவசாய சங்கத்தினர்...