×

வனத்துறை பணி தேர்வில் முறைகேடு நடந்ததாக ஆதாரம் வெளியிட்டவருக்கு நோட்டீஸ்: வாழ்நாள் தடை விதிக்க முடிவு

ஆலந்தூர்: கடந்த ஆண்டு நடந்த வனத்துறை கார்டு பணிக்கான தேர்வு முடிவில் முறைகேடு நடந்திருப்பதாக தேர்வு எழுதிய தென்காசியை சேர்ந்த மாரியப்பன் என்பவர் ஆதாரங்களுடன் கடந்த 7ம் தேதி பத்திரிகை மூலம் குற்றச்சாட்டுகள் கூறியிருந்தார்.
இதையடுத்து சைதாபேட்டையில் உள்ள தமிழ்நாடு வன சீருடை பணியாளர்கள் தேர்வு குழுமம்  தென்காசியை சேர்ந்த மாரியப்பனுக்கு கடந்த 14ம் தேதி ஒரு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீசில் கூறியிருப்பதாவது: மாரியப்பனாகிய நீங்கள்  வனத்துறை கார்டு தேர்வில் 75.57  சதவீத மதிப்பெண்கள் பெற்றும் ஓட்டுனர்  உரிமத்துடன் கூடிய தகுதியான முதலுதவி சான்றிதழ்களை அளிக்கவில்லை. அதனால் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் நீங்கள் தேர்வு செய்யப்படவில்லை. மேலும், ஆதரவற்ற பெண்களுக்கான ஒதுக்கப்பட்ட இடத்தில் தகுதியான பெண்கள் இல்லாததால் இதர பிரிவில்   தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல், முன்னாள்  ராணுவத்தினருக்கான ஒதுக்கப்பட்ட பணி இடத்துக்கு தகுதியான முன்னாள்  ராணுவத்தினர் இல்லாததால் இதர பிரிவினர் தேர்வு செய்யப்பட்டனர். இப்படி இருக்க   தமிழ்நாடு வன சீருடை பணியாளர்கள்  தேர்வு குழுமத்தின் மீது அவதூறான செய்திகளை தமிழ் நாளிழ்கள் மூலம் பரப்பி உள்ளீர்கள். இதன்பேரில் தமிழ்நாடு வன சீருடைபணியாளர்கள் தேர்வு குழுமம் மற்றும் இதர அரசுதுறை தேர்வு வாரியங்களால் நடத்தப்படும் தேர்வுகளில் நீங்கள் பங்கு  பெறுவதற்கு  தடை விதிக்கும் பொருட்டு  உங்களது பெயரினை கருப்பு பட்டியலில் இடம் பெறுவதற்கு  ஏன் நடவடிக்கை தொடர கூடாது? என்பதற்கு  உரிய விளக்கத்தினை  கடிதம் கிடைத்த 7 நாட்களுக்குள்  சென்னை தமிழ்நாடு வன சீருடை  பணியாளர்கள்  தேர்வு குழும தலைவருக்கு அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில்  விளக்கம் அளிக்க எந்த முகாந்திரமும் இல்லை எனக்கருதி உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும்.   இவ்வாறு எச்சரித்துள்ளது.

நீதி கிடைக்க வேண்டும்
நோட்டீஸ் குறித்து மாரியப்பன் கூறுகையில், ‘‘சீருடை பணியாளர் தேர்வு குழுமம்  அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை. இந்த குளறுபடிகளை  நாளிதழ்களிலும், தொலைகாட்சியிலும் சுட்டிக்காட்டியதால்  அனைத்து அரசு தேர்வு போட்டிகளிலும் பங்கேற்க தடை விதிக்கப்படும் என தமிழ்நாடு வனசீருடை பணியாளர்கள் தேர்வு குழுமம் நோட்டீஸ் அனுப்பி என்னை அச்சுறுத்துகிறது. எனக்கு நீதி கிடைக்க வேண்டும்’’ என்றார்.

Tags : Forest Service ,
× RELATED கேரள வனத்துறை அலட்சியத்தால் 2...