×

சென்னையில் செயல்படும் நிறுவனங்கள் சுகாதாரச் சான்றிதழை இணையதளம் மூலம் பெறாம்: ஆணையாளர் பிரகாஷ் அறிவிப்பு

சென்னை : சென்னை மாநகராட்சி பகுதியில் செயல்படும் நிறுவனங்கள் சுகாதார சான்றிதழை இணையதளம் மூலம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை :  சென்னை மாநகராட்சியில் செயல்படும் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகள் ஆகியவை சுகாதாரச் சான்றிதழ் இணையதளம் மூலம் விண்ணப்பித்து பெற்று கொள்ளும்  நடைமுறையை  செயல்படுத்த  புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. சுகாதாரச் சான்றிதழ்களை www.chennaicorporation.gov.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்று கொள்ளும் நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் www.chennaicorporation.gov.in என்ற இணையத்தில் Citzen Portal மூலமாக தங்களுக்கென ஒரு பயனர் குறியீடு மற்றும் கடவுச் சொல்லை உருவாக்கி, அதன் மூலம் சுகாதாரச் சான்று பெறுவதற்கான விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட இணையதள விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர், துப்புரவு அலுவலர் மற்றும் மண்டல சுகாதார அலுவலர் ஆகியோர் தங்களின் பயனர் குறியீடு மற்றும் கடவுச் சொல்லை     பயன்படுத்தி, கள ஆய்வு  மேற்கொள்வதற்கும் உரிய தொடர் நடவடிக்கை மேற்கொண்டு விதிகளுக்குட்பட்டு சுகாதாரச் சான்றினை அனுமதிப்பதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  ஒவ்வொரு தொடர் நடவடிக்கை குறித்தும் மனுதாரருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். சான்றிதழ் அனுமதிக்கப்பட்டவுடன் பொதுமக்கள் தங்களது பயனர் மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி இணையத்திலிருந்து மண்டல சுகாதார அலுவலரின் மின் கையொப்பமுடன் சுகாதாரச் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், விடுதிகள் ஆகியவை சுகாதாரச் சான்றிதழ்களை இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Companies ,Chennai ,Commissioner Prakash ,
× RELATED அதிமுக ஆட்சியில் நடந்த மாநகராட்சி...