×

நிட்மா சங்கம் சார்பில் விஷன் இந்தியா சிறப்பு கூட்டம்

திருப்பூர், பிப்.20: நிட்மா சங்கம் சார்பில் விஷன் இந்தியா 2020-2025 பின்னலாடை தொழில் சிறப்பு கூட்டம் வரும் 21ம் தேதி ஐ.கே.எப். கண்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது.திருப்பூரில் கடந்த 1978ல் பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்கம் (நிட்மா) துவங்கப்பட்டது. சங்கத்துக்கு தற்போது 42 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 2003ல் நடந்த இச்சங்க வெள்ளி விழாவில், அப்போது குடியரசு தலைவராக இருந்த அப்துல்கலாம் பங்கேற்று 5 ஆயிரம் கோடியாக இருக்கும் திருப்பூரின் பின்னலாடை வர்த்தகம், 2020ல், ஒரு லட்சம் கோடி என்கிற வர்த்தகத்தை எட்டவேண்டும் என தெரிவித்தார். கலாமின் கனவை நனவாக்கும் வகையிலும், சங்க பொன் விழாவை   கொண்டாடும் வகையில், நிட்மா சங்கம் சார்பில், விஷன் இந்தியா 2020-2025 பின்னலாடை தொழில் சிறப்பு கூட்டம் வரும் 21ம் தேதி, அவிநாசி, பழங்கரையில் உள்ள ஐ.கே.எப். கண்காட்சி வளாகத்தில் நடைபெற உள்ளது.இது குறித்து நிட்மா தலைவர் ரத்தினசாமி, செயலாளர் ராஜாமணி ஆகியோர் கூறியதாவது:நிட்மா வெள்ளி விழாவில் பங்கேற்ற அப்துல்கலாம் 2020ல், ஒரு லட்சம் கோடி வர்த்தகத்தை திருப்பூர் எட்ட வேண்டும் என்கிற லட்சிய கனவை விதைத்து சென்றார். தற்போது, ஏற்றுமதி, உள்நாட்டு வர்த்தகம் என, மொத்தம் 56 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகத்தை எட்டியுள்ளோம்.

 நிட்மாவின் பொன் விழா பயணத்தில், பின்னலாடை வர்த்தகம் வரும் 2025ல் லட்சம் கோடி இலக்கை எட்டுவதற்காக, 17 ஆண்டுக்கு முன், கலாம் திருப்பூரில் உரையாற்றிய அதே நாளில், பின்னலாடை தொழில் சிறப்பு கூட்டம் நடைபெற உள்ளது.
விழாவில், கோவை பாரதி வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கழக துணை தலைவர் மயில்சாமி அண்ணாதுரை, ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல், ‘சைமா’ தலைவர் ஈஸ்வரன், ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம், ‘டாஸ்மா’ தலைவர் அப்புக்குட்டி, ‘நிட்மா’ ஸ்தாபக தலைவர் நடராஜன் உட்பட அனைத்து தொழில் அமைப்பு, தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர்  பங்கேற்கின்றனர்.பின்னலாடை தொழில் வளர்ச்சி மட்டுமின்றி நகர மேம்பாட்டிலும் நிட்மா அக்கறைகாட்டி வருகிறது. கோவை சிறுதுளி, ஜீவநதி நொய்யல் சங்கம் இணைந்து, நொய்யலை ஜீவ நதியாக மாற்றும் முயற்சிகள் செயல்பாட்டில் உள்ளன. கடந்த காலங்களில், டீ, வளம் மற்றும் பல அமைப்புகளை இணைத்து, மாநகர வளர்ச்சிக்கான சேவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து திருப்பூர் வரும் வர்த்தகர்கள் பயன்பெறவும், மாணவர்களுக்காகவும், கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை, திருப்பூர் வரை நீட்டிக்க வேண்டும் என   கூறினார்கள்.


Tags : Vision India Special Meeting ,Nitma Association ,
× RELATED தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த...