×

திருமூர்த்தி அணை பகுதியில் மீண்டும் வண்டல் மண் அள்ள கோரிக்கை

உடுமலை, பிப்.20: திருமூர்த்தி அணையின் கிழக்குப் பகுதியில், விடுபட்ட இடங்களில் மீண்டும் வண்டல் மண் அள்ள அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே 60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணை உள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் (பிஏபி) கடைசி அணையாக இது உள்ளது. பரம்பிக்குளம் அணையில் இருந்து, பொள்ளாச்சி சர்க்கார்பதி மின் நிலையம் வழியாக, கான்டூர் கால்வாய் மூலம் அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது.

அணை கட்டும் பணியின்போது, கிழக்குப் பகுதியில் ஜல்லிபட்டி கிராமத்தில் இருந்து பலநூறு ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. இப்பகுதி மக்களும் அணை கட்டும் பணியில் ஈடுபட்டனர்.முதலில், ஒரு லட்சம் ஏக்கர் மட்டுமே பாசன வசதி பெற்று வந்தது. ஆண்டுக்கு 10 மாதங்கள் தண்ணீர் வழங்கப்பட்டது. பின்னர், படிப்படியாக பாசன பரப்பு அதிகரித்து, தற்போது கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3.77 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு அணை, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் இருந்து விவசாயிகள் வண்டல் மண் எடுத்து பயன்படுத்த அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, திருமூர்த்தி அணையின் கிழக்குப் பகுதியில் வண்டல் மண் குவிந்துள்ள இடத்தில் 50 ஆயிரம் கன மீட்டர் அளவுக்கு வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில், 28 ஆயிரம் கனமீட்டர் அளவுக்கு வண்டல் மண் எடுக்கப்பட்டது.

இந்நிலையில், பருவ மழை பெய்ததாலும், பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாலும் வண்டல் மண் எடுப்பது நிறுத்தப்பட்டது. ஏற்கனவே, வண்டல் மண் எடுக்கப்பட்ட இடத்தில் தற்போது குளம்போல் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகளுக்கு பயன் அளிப்பதாக உள்ளது. எனவே, மீதமுள்ள 22 ஆயிரம் கனமீட்டர் வண்டல் மண்ணையும் எடுக்க அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து ஜல்லிப்பட்டி கோபால் கூறுகையில்,`திருமூர்த்தி அணையின் கிழக்குப் பகுதியில் ஏற்கனவே வண்டல் மண் எடுத்து தூர்வாரியதால், அப்பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளது. இப்பகுதியில் உள்ள விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் வறண்டு காணப்பட்ட நிலையில், தூர் வாரியதால் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்தது. மீதமுள்ள இடத்திலும் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும். இதன்மூலம், நிலத்தடி நீர்மட்டம் வேகமாக உயரும். இதனால், இப்பகுதி விவசாயிகள் பயன் அடைவார்கள். இதுபற்றி ஏற்கனவே, ஜல்லிப்பட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tirumurthy ,dam ,
× RELATED பிஏபி முதலாம் மண்டல பாசன கால்வாயில்...