×

உழவர் உற்பத்தியாளர் கருத்தரங்கம்

மொடக்குறிச்சி, பிப்.20:  மொடக்குறிச்சியில் உழவர் உற்பத்தியாளர் கருத்தரங்கம் நேற்று நடந்தது. சிவகிரியில் துல்லிய பண்னை உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு உள்ளது. இதில், சிவகிரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த அமைப்பில் தங்களை ஒருங்கிணைத்துள்ளனர். இதன்மூலம்,  மத்திய, மாநில அரசுகள் விவசாய உற்பத்தியை மேம்படுத்திட, விவசாயிகளுக்கு வழங்கும் சலுகைகள் மற்றும் வேளாண் உபகரணங்களை மானிய விலையில் பெற்று தருதல், தேவையான கடனுதவி, பயிர் காப்பீடு செய்தல், விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரம், இடுபொருட்களை வழங்குதல், சொட்டுநீர் பாசனம் அமைத்தல் உள்ளிட்டவற்றை  தரத்துடன் குறைந்த விலையில் விவசாயிகளுக்கு பெற்று தருகின்றனர். உழவர்,உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வேளாண் விளைபொருட்களை, லாபகரமான விலையில் சந்தை படுத்துதல் குறித்து வாங்குவோர், விற்போருக்கான கருத்தரங்கம் நடந்தது. விளைபொருட்களை வாங்குவோர் சார்பில் 40 உழவர் உற்பத்தியாளர் கம்பெனி இயக்குனர்களும், முதன்மை செயல் அலுவலர்களும், விற்போர் சார்பில் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

துல்லிய பண்ணை திட்ட ஆலோசகரும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தோட்டக்கலைத்துறை முன்னாள் தலைவருமான வடிவேல் தலைமை தாங்கினார். விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்தால் எவ்வாறு லாபம் ஈட்ட முடியும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 17 உற்பத்தியாளர் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. மதுரை வேளாண் வகை வளர்ச்சி அமைப்பின் சார்பில் சிவகுமார், வேளாண் வணிகத்தில் வணிகத்தொடர் சங்கிலி, வணிகமதிப்பு சங்கிலி, குறித்து பேசினார். உழவர் உற்பத்தியாளர்கள் சார்பில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.  தமிழகம் முழுவதும் இருந்து 52 உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Tags : Tiller Manufacturer Seminar ,
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்த 2 மையங்கள் அமைப்பு