×

தாய்க்கு திதி கொடுக்க ஏமாற்றி பொய்க்கல்யாணம் ஒரு மாதத்திலேயே வீட்டை விட்டு வெளியேறிய கணவர்

மயிலாடுதுறை, பிப்.20: மயிலாடுதுறையில் தாய்க்கு திதி கொடுப்பதற்காக பொய்க்கல்யாணம் செய்தவர் மனைவியை விட்டுவிட்டு வெளியேறினார். இதனால் பெண்ணுக்கு உதவ முன்வந்த வழக்கறிஞர் வீட்டை இடித்ததால் அபலைப்பெண் மயிலாடுதுறை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள மேலமாப்படுகை அக்ரஹாரத்தெருவை சேர்ந்தவர் சங்கரன் மனைவி சாந்தா(48). இவர் நேற்றுமுன்தினம் இரவு மயிலாடுதுறை காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் தெரிவித்திருப்பதாவது: நான் திண்டுக்கல் காந்தி கிராமத்திலுள்ள ஆதரவற்றவர்களுக்கான அனாதை இல்லத்தில் படித்து வளர்ந்தேன். 12ம் வகுப்பு முடித்த பின்பு ஒன்றரையாண்டு செவிலியர் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடி சென்னைக்கு சென்றேன். அங்கு எனக்கு வேலை ஏற்பாடு செய்து கொடுத்த குடும்பத்தினர் என்மீது நன் மதிப்பு கொண்டதோடு என் நிலையை உணர்ந்து தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த எனக்கு மயிலாடுதுறை மே மாப்படுகையை அக்ரஹாரத்தெருவை சார்ந்த சங்கரன் என்பவருக்கு திருமணம் செய்வதாய் ஏற்பாடு செய்து. 26.2.2014 அன்று சென்னை திருநின்றவூரில் உள்ள இருதயலீஸ்வரர் சிவன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. சங்கரனின் தாய் இறந்து ஓராண்டில் திதி கொடுப்பதற்காக அவசர அவசரமாக திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக பொய்க்கல்யாணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திருமணம் ஆன ஒரு மாத காலத்திலேயே என்மீது வெறுப்பை காட்டிய எனது கணவர், மாமனாருடன் சேர்ந்து கொண்டு என்னை வீட்டிலிருந்து வெளியேறச்சொல்லி வற்புறுத்தினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். இதனால் எனது கணவர், மாமனாரை அழைத்துக்கொண்டு என்னை மட்டும் வீட்டிலேயே தனியாக விட்டுவிட்டு வெளியேறி விட்டனர். எனது நிலையை உணர்ந்த வழக்கறிஞர் ராம்முத்துக்குமார் என்பவர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவுசெய்து நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவதாகவும் கூறி எனக்கு உதவ முன்வந்தார். பின்பு ஒரு கட்டத்தில் எனது கணவர் மற்றும் மாமனாருடன் சேர்ந்துக்கொண்டு என்னை வீட்டிலிருந்து வெளியேறச் சொல்லி ராம்முத்துக்குமார் வற்புறுத்தினார். நான் விசாரித்ததில் அந்த வீட்டினை ராம்முத்துக்குமார் அவரது பெயருக்கு கிரயம் வாங்கிக்கொண்ட செய்தி தெரிந்தது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் (18ம் தேதி) காலை நான் தையல் பயிற்சிக்கு சென்றிருந்த நிலையில் நான் குடியிருந்த வீட்டை பொக்லைன் இயந்திரம் மற்றும் சில ஆட்களுடன் வந்த ராம்முத்துக்குமார் வீட்டை இடித்து விட்டார். அங்கு எனது வீட்டிலிருந்த வழக்குக்கான ஆதாரங்கள், என்னுடைய பாத்திரங்கள், உடைகள், திருமண ஆல்பம் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். இதுபற்றி அங்கு வசித்த சிலர் எனக்கு போனில் தகவல் தெரிவித்ததால் நான், ராம்முத்துக்குமாரிடம் சென்று ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டதற்கு என்னை சாதிப்பெயரைச் சொல்லி திட்டியதுடன் அனாதை உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என்று என்னை விரட்டி விட்டார். இதனால் எனது உயிருக்கு எந்த நேரத்திலும் அச்சுறுத்தல் இருப்பதாலும், எனது கணவர் வீட்டை இடித்த ராம்குமார் உள்ளிட்ட சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் மகேஷ், புத்தகச்சோலை விஜயராகவன் ஆகியோர் உடனிருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மயிலாடுதுறை காவல்நிலைய ஆய்வாளர் சிங்காரவேலு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததால் அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : home ,
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...