×

விவசாயிகளுக்கு கவனத்திற்கு... கோடை உழவில் இருக்கு கோடி நன்மை சொல்கிறார் உழவியல்துறை துணை ஆசிரியர்

தேவதானப்பட்டி, பிப். 19: கோடை காலத்தில் விளைநிலங்களில் கோடை உழவு செய்தால் கோடி நன்மை உண்டு என பெரியகுளம் தோட்டக்கலைக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய உழவியல் துறை உதவி ஆசிரியர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களே கோடைகாலமாக விளங்குகிறது. இந்த மாதங்களில் விளைநிலங்கள் தரிசுகளாக இருக்கும். இச்சமயங்களில் விளைநிலங்களை தரிசாக விடாமல் இரண்டு அல்லது மூன்று முறை நன்கு ஆழமாக உழவு செய்வதே கோடை உழவு என்கிறோம். கோடை உழவு செய்தால் மண்ணுக்கு காற்றோட்டமும், மண்ணில் உள்ள நுண்ணுயிர்களுக்கு தேவையான காற்றோட்டமும் கிடைக்கிறது. கோடை உழவு செய்வதன் மூலம் மழைநீர் நிலங்களை கடந்து செல்லாமல் மண்ணிற்குள் செல்கிறது. சாகுபடி காலங்களில் பயிர்களின் வேர்கள் ஆழமாக செல்ல வழிவகுக்கிறது. கோடை உழவால் வாழையில் வாடல் நோய், நெல் பயிரில் துங்ரோ போன்ற மண்ணில் உள்ள கிருமிகள் காய்ந்து இறந்து விடுகிறது. மேலும் பூச்சிகளின் முட்டைகள், தீங்கு விளைவிக்கக்கூடிய புழுக்கள் இறந்து விடுகின்றன.

மேலும் பயிர்களில் உள்ள களைச் செடிகளை அகற்றுவதில் கோடை உழவு பெரும் பங்கு வகுக்கிறது. கோடை உழவு செய்வதால் ஏற்கனவே மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்களும், நம்மால் இடப்படும் ஊட்டச்சத்துக்களும் வேறு இடங்களுக்கு அரித்துச்செல்லாமல் இருக்கும். மேற்கண்ட பயிர்பாதுகாப்பு முறைகளான களைக்கட்டுப்பாடு, பூச்சிக்கட்டுப்பாடு மற்றும் நோய்கட்டுப்பாடுயாவும் அதிக செலவின்றி செயற்கை ரசாயனங்களின்றி கட்டுப்படுத்தப்படுவதால், ரசாயன பின் விளைவுகளான காற்று மாசுபடுவது, தண்ணீர் மாசுபடுவது, வேளாண்நிலங்கள் மாசுபடுவது மற்றும் பிற உயிரினங்கள் பாதிக்கப்படுவது கோடை உழவு மூலம் பெருமளவில் குறைக்கப்படுகிறது. எனவே, விவசாயிகள் கோடை உழவு செய்வது நன்மை உண்டாக்கும்’ என்று கூறினார்.

Tags : assistant editor ,plumber ,
× RELATED நாகர்கோவிலில் 2 பைக்குகள் மோதி பிளம்பர் பலி