×

சிவகங்கை போக்குவரத்து அலுவலகத்தில் ஸ்மார்ட் கார்டு ஸ்டாக் இல்லை

சிவகங்கை, பிப். 19:  சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஸ்மார்ட் கார்டு ஸ்டாக் இல்லாததால் லைசென்ஸ், ஆர்சி வழங்குவதில் தேவையற்ற கால தாமதம் ஏற்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை ஆகிய 2 இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. சிவகங்கை அலுவலகத்தில் சுமார் ஐந்து தாலுகாக்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் லைசென்ஸ் பெறுகின்றனர். இங்கு ஒரு நாளைக்கு புதிய லைசென்ஸ் 400க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. எல்எல்ஆர் எடுத்து ஒரு மாதம் நிறைவடைந்தவுடன் லைசென்ஸ் எடுத்த அன்றோ அல்லது மறுநாளோ கார்டு வழங்க வேண்டும். இதுபோல் ஏற்கனவே உள்ள லைசென்சில் முகவரி உள்ளிட்ட திருத்தங்கள் செய்கின்றனர். டூவீலர் லைசென்ஸ் வைத்திருப்பவர்கள், நான்கு சக்கர  லைசென்ஸ் பெறுகின்றனர்.

பேட்ஜ் மற்றும் ஹெவி லைசென்ஸ் பெற்றவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை லைசென்ஸை புதுப்பிக்கின்றனர். இவையனைத்தும் ஸ்மார்டில் செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் சென்னை (தெற்கு), கடலூர், சிவகங்கை ஆகிய மூன்று மாவட்டத்தில் வாகன பதிவு (ஆர்சி) ஸ்மார்ட் கார்டில் வழங்கும் முறை பரிசோதனையாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஸ்மார்ட் கார்டு ஸ்டாக் இல்லாமல் முன்பு போல் சாதாரண பேப்பர் நடைமுறையிலேயே ஆர்.சி, லைசென்ஸ் வழங்கப்பட்டது. பின் மீண்டும் ஸ்மார்ட் கார்டு நடைமுறை உள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 600 ஸ்மார்ட் கார்டுகள் வரை இங்கு தேவைப்படுகிறது. ஆனால் இந்த ஸ்மார்ட் கார்டுகள் சிவகங்கை அலுவலகத்தில் போதிய அளவில் ஸ்டாக் இருப்பதில்லை. கடந்த ஒரு மாதமாக ஸ்மார்ட் கார்டு ஸ்டாக் இல்லை.

இதனால் லைசென்ஸ் பதிவு முடிந்த பின்னரும் கார்டு பெற வாகனஓட்டிகள் பல நாட்கள் அலையவேண்டிய அவலம் உள்ளது. இதுகுறித்து லைசென்ஸ் பெற வந்தவர் ஒருவர் கூறியதாவது, ‘நான் வெளியூரில் வாகனம் ஓட்டுகிறேன். இந்த மாவட்டத்தை சேர்ந்தவன் என்பதால் இங்கு லைசென்ஸ் புதுப்பிக்க வந்தேன். பல நாட்களாக அலைந்தும் எப்போது புதுப்பிக்கப்பட்ட லைசென்ஸ் கிடைக்கும் என்பதே தெரியவில்லை. இதனால் தொழில் பாதிப்படைகிறது. தொடர்ந்து கார்டு ஸ்டாக் இல்லை என அலையவிடுகின்றனர். இங்கு எந்த வேலையும் இல்லாமல் கடந்த ஒரு வாரமாக கூடுதல் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. தேவையான அளவு கூடுதலாக ஸ்டாக் வைப்பதில் என்ன பிரச்னை என தெரியவில்லை. ஸ்மார்ட் கார்டு பற்றாக்குறையில்லாமல் வைத்து லைசென்ஸ், ஆர்.சி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Sivaganga Transport Office ,
× RELATED உலக புத்தக தின விழா