×

மாசி, பங்குனி பொங்கல் விழாவிற்காக மானாமதுரையில் அக்னிசட்டிகள் தயாரிப்பு பணி தீவிரம்

மானாமதுரை, பிப். 19:  மாசி, பங்குனி மாதங்களில் கோயில்களில் நடக்கவுள்ள பொங்கல் திருவிழாக்களுக்காக அக்னிசட்டிகள், நேர்த்திக்கடன் பொம்மைகள், ஆயிரம்கண் பானைகள் தயாரிக்கும் பணி மானாமதுரையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆண்டுதோறும் மாசி மாதம் சிவராத்திரி, மாசிகளரி உற்சவங்களில் கிராம கோயில்களில் உள்ள குலதெய்வங்களுக்கு பொங்கல் விழாவும், பங்குனி மாதங்களில் மாரியம்மன் கோயில்களில் பங்குனி பொங்கல் விழாவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கிராம காவல் தெய்வங்களுக்காக நடத்தப்படும் மாசிக்களரி மற்றும் காளியம்மன், மாரியம்மனுக்கு பங்குனி மாதங்களில் நடக்கும் பொங்கல் விழாவிலும் நேர்த்திகடனாக பக்தர்களால் அக்னிசட்டி, ஆயிரம்கண் பானை, குழந்தைபேறு பொம்மைகள், கரும்பு தொட்டில் கட்டுவது போன்ற சடங்குகள் செய்யப்படுகின்றன. இதற்காக தேவைப்படும் அக்னிசட்டி, மண்பொம்மைகள்,  ஆயிரம்கண் பானை தயாரிக்கும் பணி தற்போது மானாமதுரையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அக்னிசட்டிகளில் அம்மன் முக அமைப்பு கொண்ட மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது முகங்கள் செய்யப்படுகிறது.

தெய்வ காரியம் என்பதால் மண்பாண்ட பொருட்கள் தயாரிப்பில் மற்றவைகளை விட இவற்றிற்கு கூடுதல் கவனம் செலுத்தி தயாரிக்கப்படுகிறது.  அம்மன் முகங்கள் கோல்டு கலர் பெயிண்ட் பூசப்பட்டு கலைநயத்துடன் நேர்த்தியாக செய்யப்படும் அக்னிசட்டி, ஆயிரம்கண் பானைகளை வாங்கி விற்பதற்காக ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, திருச்சி பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து அக்னிசட்டிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள வேலு கூறுகையில்., ‘வழக்கமாக தைமாத ஆரம்பத்திலேயே அக்னிசட்டிகள் தயாரிக்கும் பணி தொடங்கிவிடும். இருக்கன்குடி, விருதுநகர், தாயமங்கலம், சமயபுரம் மாரியம்மன், காரைக்குடி கொப்புடையம்மன் உள்ளிட்ட பிரபல கோயில்களில் நடக்கும் விழாக்களில் விற்பனை செய்வதற்கு வியாபாரிகள் இவற்றை வாங்கி செல்கின்றனர்.  குழந்தை பேறுக்காக நேர்த்திக்கடன் செலுத்தப்படும் மண்பொம்மைகள் ரூ.300க்கும்,  மூன்று முகங்கள் பதித்த அக்னிசட்டி ரூ.90க்கும்,  ஐந்து முகங்கள் உள்ளது ரூ.110க்கும், ஏழு முகங்கள் உள்ளது ரூ.150க்கும்,  ஒன்பது முகங்கள் உள்ளது ரூ.200க்கும் விற்கப்படுகிறது. ஆயிரம்கண் பானை 50 ரூபாய்க்கு விற்கிறோம்’ என்றார்.

Tags : Agnisatti ,Manamadurai ,Massi ,Panguni Pongal Festival ,
× RELATED மானாமதுரை வீரஅழகர் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்