×

‘சமூக மனநிலையின் எதிரொலியே நாடகங்கள்’ * நிஜ நாடகவியல் அறிஞர் மு.ராமசாமி பேட்டி

மதுரை, பிப். 19: ‘ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகவும், சமூக மனநிலையின் எதிரொலியாகவும் நாடகங்கள் உள்ளிட்ட கலைகள் திகழ வேண்டும். கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமை இங்கே யாருக்கும் உண்டு’ என்று நிஜ நாடகவியல் அறிஞர் மு.ராமசாமி தெரிவித்தார். மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி தமிழ்த்துறை உயராய்வு மையத்தின் சார்பாக கல்லூரி வளாகத்திலுள்ள தெருக்கூத்து திறந்தவெளி அரங்கில் “வகுப்’பறை’” என்ற நாடகம், கல்லூரி மாணவியரால் நேற்று நடத்தப்பட்டது.

இதனை நெறியாளுகை செய்த பேராசிரியர் மு.ராமசாமி நிருபர்களிடம் கூறும்போது, ‘‘வகுப்பறை என்பது ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வோடு அமைய வேண்டும். அது எல்லையற்ற இனிமையைக் கொண்டிருக்க வேண்டும். தாங்கள் கொண்டிருக்கும் கருத்துக்களை வெளிப்படுத்துகின்ற உரிமையை இந்திய அரசியல் சட்டம் நமக்கு வழங்கியிருக்கிறது. மட்டுமன்றி, தனிப்பட்ட ஒருவரின் கருத்தே இங்கு இறுதியானதன்று. ஆகையால் ஜனநாயகப் பண்பும் பார்வையும் மிக மிக அவசியம் என்கிற காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்’’ என்றார்.

வகுப்பறையும், மாணவர்- ஆசிரியர்களுக்கிடையிலான புரிதலும் எவ்வாறு நிகழ வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த நாடகத்தை மாணவியர் நிகழ்த்திக் காட்டினர். கல்லூரியிலுள்ள பல்வேறு துறை சார்ந்த மாணவியர் இந்த நாடகத்தில் பங்கேற்றனர். தமிழ்த்துறையின் தலைவர் கவிதாராணி உள்ளிட்ட பேராசிரியர்கள் நாடக நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். மேலும், இன்று (பிப்.19) காலை 11 மணிக்கும், பிற்பகல் 3 மணிக்கும் காட்சிகள் நடைபெறவுள்ளன.

Tags :
× RELATED 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு