×

சிஏஏவுக்கு எதிரான போராட்டம் எதிரொலி 2 ஷிப்டில் 450 போலீசாருக்கு சிறப்பு இரவு ரோந்து பணி

சேலம், பிப்.19:  சிஏஏவுக்கு எதிரான போராட்டம் எதிரொலியாக சேலம் மாவட்டம் முழுவதும் 2 ஷிப்பில் 450 போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.குடியுரிைம திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரம், சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த இஸ்லாமியர்களின் போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதால், அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் மீண்டும் ஆர்ப்பாட்டம், தொடர் முழக்க போராட்டம் போன்றவற்றை மாவட்டம் வாரியாக கையில் எடுத்துள்ளனர். சேலத்தில், மாநகர பகுதியில் உள்ள கோட்டையில் இஸ்லாமிய பெண்கள், தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும், மாவட்டம், மாநகர பகுதியில் திடீரென மறியல் போராட்டங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்பதால், போலீஸ் கண்காணிப்பு தீவிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வகையில், சேலம் மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இரவு ரோந்து பணியை அதிகப்படுத்தியுள்ளனர். இரவு 10 மணியில் இருந்து காலை 6 மணி வரை 8 மணி நேரத்திற்கு 2 ஷிப்டாக மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து சுற்றி வர சிறப்பு படையை எஸ்பி தீபாகனிகர் பணியமர்த்தியுள்ளார். இதில், 2 கூடுதல் எஸ்பிக்கள், 10 டிஎஸ்பிக்கள், அனைத்து ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், ஏட்டுகள் என 450 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த 450 பேரும் 2 ஷிப்டாக பிரிந்து, இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரையில் ஒரு பிரிவாகவும், அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை மற்றொரு பிரிவாகவும் ஜீப், டூவீலர்களில் முக்கிய இடங்களில் ரோந்து சுற்றி வருகின்றனர். ஆத்தூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி, தலைவாசல், ஏற்காடு, ஓமலூர், இடைப்பாடி, சங்ககிரி, மேட்டூர், இளம்பிள்ளை பகுதிகளில் கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. சிஏஏவுக்கு எதிராக போராட்டம் நடத்த மக்கள் ஒன்று கூடுகிறார்களா? எனவும் கண்காணிக்கின்றனர்.இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “சிஏஏவுக்கு எதிராக போராட்டங்கள் நடப்பதால், கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளோம். இதற்காக வழக்கமான இரவு ரோந்து போக, கூடுதலாக 2 ஷிப்டில் சிறப்பு ரோந்து பணியில் ஈடுபட போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள், விடிய விடிய முக்கிய பகுதிகளில் ரோந்து சுற்றி வருவார்கள்,’’ என்றனர்.

Tags : policemen ,CAA ,
× RELATED திருவாரூர் ஆழித்தேரோட்டத்திற்கு 2000 போலீசார் பாதுகாப்பு