×

திருமயம், அரிமளம் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள்

திருமயம், பிப்.19: திருமயம், அரிமளம் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகளால் மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். குரங்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகாிக்கிறது.இதற்கு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர் வறட்சியால் காட்டு வன விலங்குகள் காட்டை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் இரை மற்றும் குடிநீர் தேடி படையெடுத்து வருகின்றன. இதில் குறிப்பாக குரங்கு, மயில் உள்ளிட்டவைகள் குடியிருப்புவாசிகள், விவசாயிகளுக்கு பல இன்னல்களை கொடுத்து வருகிறது. இருப்பினும் குரங்கு, மயில் போன்றவற்றை இந்து கடவுளாக வணங்கி வருவதால் இதனை பொதுமக்கள் காயப்படுத்தாமல் விரட்டி வருகின்றனர். அதே சமயம் ஒரு சில இடங்களில் விவசாய நிலங்களில் உள்ள தானியங்களை சேதப்படுத்தும் மயில்களை ஒர சிலர் விஷம் வைத்து கொல்லும் நிகழ்வுகளும் நடந்து வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக அரிமளம், திருமயம் பகுதியில் மயில்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே குரங்குகள் ஒரு படி மேலே போய் விளை நிலங்கள் மட்டுமல்லாது குடியிருப்புகளுக்குள் கூட்டம் கூட்டமாக நுழைந்து வீட்டு தோட்டம் உள்ளிட்டவைகளை நாசம் செய்து வருகின்றன. இதனால் அரிமளம், திருமயம் பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் வீட்டருகே வளர்த்த மா, பாலா, வாழை, கொய்யா, தென்னை உள்ளிட்டவைகளில் இருந்து எந்த ஒரு பலனும் அடைய முடியவில்லை. இந்நிலையில் குரங்குகளுக்கு பயந்து பெரும்பாலான குடியிருப்புவாசிகள் வீட்டு தோட்டத்தை பராமரிப்பதையே விட்டு விட்டனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரிமளம், திருமயம் பகுதியில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை பிடிக்க முடியவில்லையென்றாலும் குடியிருப்பு, வயல்பகுதியை விட்டு விரட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.இது குறித்து அரிமளம் பகுதி மக்களிடம் கேட்ட போது:அரிமளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் வயல் விவசாயம் மட்டுமன்றி வீட்ருகே தோட்டம் வைத்து அதில் விளையும் காய்கறிகள், பழங்களை அரிமளம், கே.புதுப்பட்டி, ராயவரம், கடியாபட்டி உள்ளிட்ட பகுதியில் நடைபெறும் சந்தைகளுக்கு எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை முற்றிலும் பொய்த்து போன நிலையில் வயல்களில் ஒரு சிலர் மட்டுமே விவசாயம் செய்து வருகின்றனர்.

இதே போல் காட்டு பகுதிகளுக்குள்ளும் வறட்சி நிலவுவதால் காட்டிற்குள் சுற்றி திரிந்த குரங்குகள், மயில்கள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை வீணாகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த நாய்கள் வளர்த்தாலும் குரங்குகள் ஒன்று சேர்ந்து நாய்களை தாக்குவதால் நாயை கண்டு குரங்கு பயந்த காலம் போய் குரங்குகளை கண்டு நாய் ஓடுகிறது. இதனிடையே ஒரு சிலர் சிவகங்கை மாவட்ட பகுதியில் உள்ள குரங்குகளை பிடித்து வந்து அரிமளம் வனப்பகுதிக்குள் விட்டு செல்வதாக கூறப்படுகிறது. இதனால் அரிமளம் பகுதியில் குரங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. மேலும் கூறை, ஓடு வீடுகளுக்குள் ஓடுகளை பிரித்து கொண்டு திருடன் போல் வீட்டுக்குள் குரங்குகள் இறங்கி வீட்டிலுள்ள பொருட்களை வேட்டையாடி வருகிறது. இது பொதுமக்களுக்கு கடும் வேதனை அளித்து வருகிறது. மேலும் மருத்துவமனை, பள்ளி வளாகம், கடை வீதி பகுதிக்குள் குரங்குகள் துழைந்து நோயாளிகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்களை சிரமப்படுத்தி வருகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் பல முறை புகார் தெரிவித்தும் மாவட்ட நிர்வாகமும், அதிகாரிகளும் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதன் விளைவாகவே கடந்த சில ஆண்டுகளாக மான்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதும் நாய்களுக்கு இரையாவதும் வாடிக்கையாகி வருகிறது. காடுகள் அழிப்பதை பாதுகாக்க அதிகாரிகள் இருக்கும் போது வன விலங்குளை பாதுகாக்க அதிகாரிகள் இல்லையா என கேள்வி எழுப்பினர்.

Tags : houses ,area ,Thirumayam ,Arimalam ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...