×

ரசாயனம் இல்லாத வேளாண்மைக்கு முக்கியத்துவம் அய்யனார் சாமியிடம் விவசாயிகள் நூதன முறையில் நிழல் பட்ஜெட் தாக்கல்

அரியலூர்,பிப்.19: தமிழக அரசு தற்போது தாக்கல் செய்த பட்ஜெட் இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்கவில்லை. எனவே அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ரசாயன வேளாண்மை இல்லாத நிழல் பட்ஜெட்டை நூதன முறையில் தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் மீட்க வும் புதிய நீர்நிலைகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். வேளாண்மையை ஊக்கப்படுத்த உதவும் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு நிதியை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக நிதி வழங்குபவர்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு அளிக்கப்படும்.இயற்கை வேளாண்மையில் அனுபவமுள்ளவர்களைக் கொண்டு குழு அமைக்கப்பட்டு அவர்கள் மூலம் அனைத்து பகுதிகளிலும் மண் பரிசோதனை செய்யப்படும். பின் மண்ணுக்குத் தகுந்த எந்தந்த காலங்களில் எந்தந்த பாரம்பரிய விதைகள் விதைக்கலாம் என்ற அனுபவ அறிவு பகிர்ந்து கொள்ள வழிவகை செய்யப்படும்.இயற்கை வேளாண்மையை ஊக்குவித்து இரசாயன வேளாண்மையில் ஈடுபட்ட விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில் ஒரு கிலோ அரிசி ரூ.100க்கு கொள்முதல் செய்யப்பட்டு 50 சதம் மானிய விலையில் விற்பனை செய்யப்படும். பாரம்பரிய ரக விதைகள் கூட்டுறவு விற்பனை அங்காடிகள் மூலம் மற்றும் படித்த இளைஞர்களை கொண்ட குழு மூலம் பரவலாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இயற்கை வேளாண்இடுபொருட்களை தயாரிக்கும் பயிற்சி அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படும். நாட்டு மாடுகளை காக்கும் வகையில் சிறப்பு காப்பீடுத் திட்டம் உருவாக்கப்படும். இயற்கையில் விளைந்த காய்கறிகள் கிலோ ஒன்றுக்கு ரூ.30 விலை கொடுத்து வாங்கப்படும். அனைத்து கடைகளிலும் ரூ.15க்கு மானிய விலையில் காய்கறிகள் கிடைக்க வழி வகை செய்யப்படும்.

மானிய தொகை முழுவதும் இயற்கை விவசாய ஆர்வலர்கள் வழங்கும் நிதியில் சரி கட்டப்படும். ரசாயன உரமில்லாமல் விவசாயம் செய்யும் பொருட்டு இயற்கை பூச்சி விரட்டிகள் தயாரிக்க பயிற்சிகள் வழங்கப்படும். நிலத்தடி நீரை செறிவூட்ட பாழடைந்த மற்றும் பயன்பாடற்ற கிணறுகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.குறைந்த விலையில் நீராபானம் இளநீர் பதநீர் அனைத்து கடைகளிலும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அம்மா உணவகங்களில் சிறுதானிய உணவுகள், கம்மங்கூழ், கேழ்வரகு கூழ் கிடைக்க வழி வகை செய்யப்படும். கிராமங்கள் தோறும் மாட்டுச்சாணம், மனித கழிவு மற்றும் காய்கறி கழிவுகளை கொண்டு மின்சாரம் மற்றும் இயற்கை எரிவாயு நிலையங்களை ஏற்படுத்தி கிராம இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தவும், விரைவான பொருளாதார உயர்வு பெறவும், ரூ.100 விலையில் சிலிண்டர் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டு ரக மாடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு சத்தான சீம்பால், தண்ணீர் கலப்படமில்லாத தூய்மையான பால் விநியோகம் முறைப்படுத்தப்படும். 100 சதவீதம் நாட்டு கோழிக ரகங்ளை ஹைபிரிட் ரகங்களை முழுவதும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

பனையேறிகளுக்கான பயிற்சி அளித்து தினசரி ஊக்கத்தொகை வழங்கி பனைப்பொருட்கள் பனை மரத்தால் ஆன கைவினைப் பொருட்கள் ஆகியவற்றின் விற்பனையை அதிகரிக்க வேண்டும். கால்நடை வளர்ப்பினை ஊக்கப்படுத்த மேய்ச்சல் நிலங்கள் உருவாக்கித் தரப்படும். இதனால் தீவனச் செலவுகள் குறையும். மண் சார்ந்த மரங்களை நடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இந்நிகழ்ச்சியில் இவ்வாறு இயற்கை விவசாயம் அதிகரிக்க பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என நிழல் பட்ஜெட்டாக கோரியம் பட்டி அய்யனார் கோயிலில் உள்ள அய்யனார் சாமியிடம் விவசாயிகள் அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநில தலைவர் தங்க சண்முக சுந்தரம் தலைமையில் நிழல் பட்ஜெட்டாக நூதன முறையில் தாக்கல் செய்தனர்.நிகழ்ச்சியில் விவசாய சங்க நிர்வாகிகள் ஜெயா வேல்முருகன், சுப்ரமணியன், மகாராஜன், சிவக்குமார், பன்னீர்செல்வம் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags : Ayyanar Samy ,
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது