×

நாகை மாவட்டத்தில் பதனீர் இறக்க தடை விதிக்க கூடாது அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் முடிவு

நாகை,பிப்.19: பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து பதனீர் இறக்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் பதனீர் இறக்கி விற்பனை செய்ய போலீசார் தடை விதித்துள்ளனர்.மேலும் அவ்வாறு பதனீர் இறக்கி விற்பனை செய்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து மிரட்டினர். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போலீசாரை கண்டித்து வரும் 20ம் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர். இதையடுத்து நேற்று நாகை தாசில்தார் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.இதில் நாடார் மக்கள் பேரவை மாநில தலைவர் ராஜா, புதுச்சேரிமாநில நாடார் மக்கள் பேரவை மாநில பொதுச் செயலாளர் காளிதாஸ், நாகை மாவட்ட தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். நாகை தாசில்தார் பிரான்சிஸ் முன்னிலையில் நடந்த அமைதி பேச்சுவார்த்தையில் நாகை, நாகூர் போலீசாரும் கலந்து கொண்டனர். இறுதியாக அரசு விதிமுறைகளின் படி பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து பதனீர் இறக்குவதற்கு அனுமதி உள்ளது.

எனவே போலீசார் பதனீர் இறக்குவதற்கு தடை ஏற்படுத்தாமல் அனுமதிக்க வேண்டும். கள் இறக்குவோர் மீது சாராய வழக்கு போடாமல் கள் இறக்கிய வழக்காக போலீசார் வழக்கு பதிவு செய்ய வேண்டும். பனை மற்றும் தென்னை மரங்களில் இருந்து பதனீர் இறக்க முடியாத வயது முதிர்ந்த தொழிலாளர்களுக்கு அரசின் சார்பில் உதவிகளை பெற்று தருவது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து அமைதி பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து வரும் 20ம் தேதி நடைபெறுவதாக இருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.



Tags : negotiations ,district ,Nagai ,
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...