×

நெல் விற்பனை செய்ய அரசு கொள்முதல் நிலையங்களில் ஒரு வாரமாக காத்திருக்கும் விவசாயிகள் கடனை அடைக்க தனியாரை நாடும் அவலம்

வேதாரண்யம்,பிப்.19: வேதாரண்யம் தாலுகாவில் ஊழியர்கள் பற்றாக்குறையால், நெல் கொள்முதல் நிலையங்களில் ஒருவாரமாக விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தனியாரிடம் நெல்லை விற்கும் அவல நிலையில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.வேதாரண்யம் தாலுகாவில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி சுமார் 24 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நடைபெற்றது. இதில் தலைஞாயிறு, பிராந்தியங்கரை, மூலக்கரை உள்ளிட்ட ஆற்றுபாசன பகுதியில் சுமார் 12ஆயிரம் ஹெக்டேரும் மானாவாியில் மழையை மட்டுமே நம்பி உள்ள ஆயக்காரன்புலம், வாய்மேடு, ஆதனூர், பஞ்சநதிகுளம் சுமார் 12 ஆயிரம் ஹெக்டேரும் சம்பா சாகுபடி நடைபெற்றது. தற்போது சம்பா அறுவடை பணி தாலுகா முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்துஉள்ளது. ஏராளமான விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்தில் போடுவதற்காக மூட்டைகளை கொண்டு வந்து அடுக்கி வைத்துள்ளனர். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் அடுக்கி வைத்துள்ளனர். பணியாளர்கள் பற்றாக்குறை, சாக்கு தட்டுப்பாடு இணைய தள வசதி சரிவர கிடைக்காததால் நெல் கொள்முதல் செய்ய முடியாமல் நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கிறது.

அறுவடை செய்த நெல்லை விற்க குறைந்தபட்சம் ஒருவார காலம் காத்து கிடக்க வேண்டியுள்ளது. ஒரே நேரத்தில் அறுவடை ஆவதால் அறுவடை இயந்திர தட்டுப்பாட்டால் விவசாயிகள் கூடுதலாக இயந்திரத்திற்கு வாடகை கொடுத்து நெல்லை அறுவடை செய்தாலும் நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல்லை விற்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.பல விவசாயிகள் வட்டிக்கு கடன் வாங்கி விவசாயம் செய்து உள்ளனர். நெல்லை அறுவடை செய்து வட்டி கடனை அடைத்து விடலாம் என்று நினைத்த விவசாயிகள் நேரடிநெல் கொள்முதல் நிலையத்தில் நெல் விற்க முடியாததால் தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்று கடனை அடைத்து வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.எனவே நாள் ஒன்றுக்கு அரசு அறிவித்த ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும். என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : government procurement centers ,someone ,
× RELATED சிறையில் இருப்பவரை ஜாமீனில்...