×

நீதிமன்றத்தை இடம் மாற்றுவதா? கடவூர் பகுதி மக்கள் எதிர்ப்பு போராட்டம் நடத்த முடிவு

கடவூர், பிப். 19: கடவூர் தாலுகாவிற்கு வரவேண்டிய நீதிமன்றத்தை கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்கு மாற்றியதால் கடவூர் பகுதி மக்கள் கொந்தளிப்பு அடைந்துள்ளனர். அ.தி.மு.க.வை தவிர மற்ற கட்சியினர் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர்.கடவூர் தாலுகா தரகம்பட்டியில் கடந்த 2009ம் ஆண்டு தரகம்பட்டியில் தொடங்கப்பட்டது. இதில் 23 கிராமங்கள் உள்ளன. இதில் மூன்று கிராமங்களைத் தவிர மற்ற 20 கிராமங்கள் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் உள்ளது. இதில் கடவூர் ஒன்றியத்தில் சுமார் 80 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். கிருஷ்ணராயபுரம் தொகுதியில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது கடவூர் ஒன்றியம் தான். கடந்த தி.மு.க. ஆட்சியின் போது கடவூர் தாலுகா வந்தவுடன் நீதிமன்றம் அமைக்க வேண்டுமென அப்போதைய தி.மு.க. எம்.எல்.ஏ. காமராஜ் சட்ட சபையில் கோரிக்கை வைத்தார். அந்த மனு பரிசீலினையில் இருந்து வந்தது.பின்னர் ஆட்சி மாற்றத்திற்கு பின்பு அந்த மனு கிடப்பில் போடப்பட்டது.

இன்றளவும் கடவூரின் மையப்பகுதியாக உள்ள தரகம்பட்டியில் நீதிமன்றம் அமைக்க வேண்டுமென பலதரப்பட்ட மக்கள் மற்றும் பல கட்சியினர் கோரிக்கை வைத்தனர். இதனை அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் கடவூருக்கு வந்த நீதிமன்றத்தை மறைமுகமாக கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு மாற்றியதாக தகவல் பரவி உள்ளது. இதனால் பொதுமக்கள் கொந்தளிப்பு அடைந்துள்ளனர். மேலும் அ.தி.மு.க. வை தவிர மற்ற கட்சியினர் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர்.கடவூர் பகுதியில் நீதிமன்றம் அமைக்கவில்லையென்றால் 1987ல் தாலுகாவிற்கு நடந்த போராட்டம் போல் இப்பொழுதும் நடக்கும் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மார்க். கம்யூ. மாவட்டக்குழு உறுப்பினரும், ஒன்றிய கவுன்சிலருமான ராமமூர்த்தி கூறுகையில், தரகம்பட்டியில் நீதிமன்றம் அமைக்க வேண்டுமென ஏற்கனவே ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதற்கான இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இடத்தின் மீதான வழக்கு நிலுவையில் உள்ளதால், தற்காலிகமாக கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதனை மாற்றி கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு கொண்டு சென்றது மிகவும் வருத்தம் அளிக்கிறது. கடவூர் ஒன்றியத்தில் அதிக வழக்குகள் உள்ளன.மேலும் இந்த பகுதி மக்கள் கிருஷ்ணராயபுரம் நீதிமன்றம் அல்லது குளித்தலை நீதிமன்றம் செல்ல வேண்டுமென்றால் சுமார் 45 கி.மீ. செல்ல வேண்டும். இதனால் பொதுமக்களுக்கு வீண் காலவிரயம் ஏற்படுகிறது. கடவூர் பகுதியில் நீதிமன்றம் அமைத்தால் பொதுமக்களுக்கு காலவிரயம் ஆகாது. இது தொடர்பாக அரசுக்கு பலதரப்பட்ட கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு செவி சாய்க்கவில்லை.கடவூர் தாலுகாவின் மையப்பகுதியில் நீதிமன்றம் அமைக்கவில்லையென்றால் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்வோம் என கூறினார்.

Tags : court ,area ,protest ,Kadavur ,
× RELATED விளம்பரங்களுக்கு அனுமதி தருவதில்...