வேன் கண்ணாடியை உடைத்ததால் ஆத்திரம் கள்ளக்காதலியின் தாய் சரமாரி குத்திக்கொலை

சென்னை, பிப். 19: வீட்டுக்கு சென்று தகராறு செய்ததால் கள்ளக்காதலியின் தாயை கத்தியால் குத்திக்கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டை, ஜீவாநகர், மெயின் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (40). இவரது மனைவி யுவராணி (35). இவர்களது மகன் சஞ்சய். கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுக்கு முன்பு கணவனை பிரிந்து, செங்கல்பட்டில் உள்ள தாய் வீட்டுக்கு யுவராணி சென்றுவிட்டார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் தனலட்சுமி (37) என்பவருக்கும், சந்திரசேகருக்கும் கடந்த 2 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. திடீரென தனலட்சுமியின் நடந்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் சந்திரசேகர் அவரைவிட்டு பிரிந்துசென்று விட்டார். கடந்த 3 மாதத்துக்கு முன்பு தனலட்சுமிக்கும், சந்திரசேகருக்கும் மீண்டும் தொடர்பு ஏற்பட்டு சந்தித்து பேசியுள்ளனர். இதனிடையே பாலியல் வழக்கு தொடர்பாக தனலட்சுமியை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இதன் பிறகு வெளியில் வந்த தனலட்சுமி, சந்திரசேகருடன் செல்போனில் தொடர்பு கொண்டபோது போனை எடுத்து பேசவில்லை என தெரிகிறது. இதையடுத்து தனலட்சுமி, அவரது தாய் ரத்னாவதி (எ) ரத்னா (58) மற்றும் தனலட்சுமியின் மகள் ஷாலினி ஆகியோர் நேற்று சந்திரசேகரின் வீட்டுக்கு சென்று தகராறு செய்தனர்.

அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த சந்திரசேகரின் வேனின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதனால் கோபம் அடைந்த சந்திரசேகர் வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து ரத்னாவின் வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்தவெள்ளத்தில் விழுந்த ரத்னா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதை தடுக்க முயன்ற தனலட்சுமி, ஷாலினியின் கைகளிலும் கத்திக்குத்து விழுந்தது. தகவலறிந்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, ரத்னாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அதே மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து சந்திரசேகரை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>