×

நாகர்கோவில் வடசேரி காய்கறி சந்தையில் தீ 3 கடைகள் எரிந்து சாம்பல்

நாகர்கோவில், பிப்.19:  நாகர்கோவில் வடசேரி சந்தையில்   ஏற்பட்ட தீ விபத்தில் 3 கடைகள் மற்றும் பைக் ஒன்று எரிந்து சாம்பல் ஆனது. நாகர்கோவில் வடசேரி காய்கறி சந்தையில், சுமார் 250க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.  கடந்த  சில ஆண்டுகளுக்கு முன் இங்கு தீ விபத்து ஏற்பட்டு, 4 பேர் வரை உயிரிழந்தனர். இதையடுத்து கான்கிரீட் கட்டிடங்கள் கட்டப்பட்டன. இந்த நிலையில் நேற்று அதிகாலை 1 மணியளவில் திடீரென வடசேரி காய்கறி சந்தையில் வலதுபுறம் உள்ள குப்பையில் தீ பிடித்தது. ஏற்கனவே வெயில் காரணமாக குப்பைகள் காய்ந்து கருகிய நிலையில் இருந்ததால், தீ மள, மளவென பரவியது. காற்றும் வேகமாக வீசியதால் தீயின் வேகம் அதிகரித்தது. இதில் அந்த பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக கடைகளுக்கும் தீ பரவியது. இந்த தற்காலிக கடைகளில் தார்ப்பாய்கள் கட்டப்பட்டு இருந்தன. இதனால் தீ வேகமாக எரிந்தது.

இது குறித்து அங்கிருந்த காவலாளிகள் மற்றும் பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். வடசேரி காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு உத்தரவின் பேரில், நாகர்கோவில் நிலைய அலுவலர் துரை தலைமையில் தீயணைப்பு படையினர் சென்று  தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 3 பழக்கடைகளும், அந்த பகுதியில் நின்ற பைக்கும் எரிந்து சாம்பல் ஆனது. இதன் சேத மதிப்பு ₹1 லட்சம் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் தெரிய வில்லை. வடசேரி காய்கறி சந்தையில் தற்போது வியாபாரிகளுக்கும், நுழைவு கட்டண குத்தகைதாரர்களுக்கும் இடையே பிரச்னை இருந்து வருகிறது. வடசேரி காவல் நிலையம் வரை சென்று பேச்சு வார்த்தை நடந்துள்ளது. இந்த நிலையில் தீ விபத்து நிகழ்ந்து இருப்பது பரபரப்பை உண்டாக்கி உள்ளது. ஏதாவது நாசவேலைக்கு திட்டமிட்டு யாராவது தீ வைத்தார்களா? அல்லது வேறு காரணங்கள் இருக்குமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : shops ,Ashoka Vegetable Market ,Nagercoil ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி