×

மகளிர் ஒதுக்கீட்டில் வெற்றிபெற்ற ஊராட்சிகளில் பெண் தலைவர் இருக்கையில் அமர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்யும் கணவர்கள்

சென்னை, பிப். 19: தமிழகத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட குழு தலைவர், ஒன்றியக்குழு தலைவர் மற்றும் ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் வெற்றி பெற்றுள்ள பெண்கள், சுயமாக செயல்பட விடாமல், அவர்களின் கணவர்களே அறிவிக்கப்படாத தலைவராக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக ஊரில் உள்ள பிரச்னை மற்றும் குறைகள் பற்றி தெரிவிக்க சென்றால் ஊராட்சி தலைவரின் கணவர்தான் பதில் சொல்கிறார். தலைவர் எங்கே என்று கேட்டால், நான் தான் இருக்கிறேனே, எந்த பிரச்னையாக இருந்தாலும் என்னிடம் சொல்லுங்கள் என்று கூறி அனுப்பி விடுகிறார்கள். இதனால் பிரச்னை பற்றி தெரிவிக்க செல்லும் பெண்களுக்கு பெரும் வெறுப்பை உண்டாக்கியுள்ளது.
இதுதவிர, சில ஊராட்சி பெண் தலைவர்களின் கணவர்கள்,  பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ள அவரது இருக்கையில் அமர்ந்துகொண்டு மக்களிடம்  பிரச்னை பற்றி கேட்கின்றனர். மேலும், ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து  போன்ற தங்களின் தனிப்பட்ட பணிகளையும் ஊராட்சி அலுவலகத்தில் வைத்தே செய்து வருவாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி, ஆவணங்களில் கையெழுத்து இடுவதற்கு மட்டுமே பெண் ஊராட்சி தலைவர்களை அவர்களின் கணவர்கள் அனுமதிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், பெயரவுக்கு பெண் தலைவர்கள் என கூறிக்கொண்டாலும், அவர்களின் கணவர்களே அனைத்து வேலைகளையும் செய்கின்றனர். இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், ‘‘உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சத இடஒதுக்கீடு செய்யப்பட்டதே பெண்கள் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணுவதற்காகத்தான். ஆனால் பெண் தலைவர்களை, கணவன்கள் ஆட்டி படைக்கின்றனர். இதனால் பெண்கள், தங்களது பிரச்னைகளை சொல்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இந்த விஷயத்தில் உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீத பெண்கள் பதவியேற்றுக் கொண்டனர். மாவட்ட குழு தலைவர், ஒன்றியக்குழு தலைவர் பதவிகளும் உள்ளன. சம்பந்தப்பட்ட ஒன்றிய அலுவலகம், ஊராட்சி அலுவலகத்துக்கு சென்றால், அங்கு தலைவர் இருக்கையில் கணவன் அமர்ந்து பணியாற்றுகிறார். இதனால் அவர்களிடம்தான் குறைகளை சொல்கிறோம்.

யார் தலைவராக வந்தால் நல்லது நடக்கும் என்றுதான் மக்கள் தேர்வு செய்தனர். ஆனால் அதற்கு மாறாக கணவன், ஆதிக்கம் செலுத்துவது சரியாகுமா, மக்கள் பிரச்னை தீருமா, பல இடங்களுக்கு பெண் தலைவர்களை அனுப்பாமல் ஆய்வுக்கு கணவன் வருகிறார். இதில் அவருக்கு சம்பந்தமே கிடையாது. ஆனால், நிர்வாகத்தில் தேவையில்லாமல் தலையிடுகின்றனர். கவர்னராக, முதல்வராக, நீதிபதிகளாக பெண்கள் பணியாற்றிவரும் இந்த காலத்தில் ஊராட்சி பெண் தலைவர்களை கணவன்மார்கள் ஆட்டிபடைப்பது சரியல்ல’’ என்றனர்.

Tags : Husbands ,women ,chair ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது