×

புதிதாக கட்டி முடித்து திறப்பு விழாவுக்கு முன்பே ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிட சுவர்களில் விரிசல்

ஸ்ரீபெரும்புதூர், பிப். 19: புதிதாக கடந்த ஆண்டு கட்டி முடித்து திறப்பு விழா நடக்க உள்ள ஸ்ரீபெரும்புதூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்தின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இதனை தரமில்லாமல் ஒப்பந்ததாரர் கட்டியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் கடந்த 2008ம் ஆண்டு முதல் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் செயல்படுகிறது. இந்த நீதிமன்றம் இயங்கி வரும் கட்டிடம் பழமையானதாலும், போதிய இடவசதி இல்லாததால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி சிவன்தாங்கல் பகுதியில் இடஒதுக்கீடு செய்து, புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டிடம் கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டிடத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்படாததால், நீதிமன்ற வளாகத்தில் ஆடு, மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் சுற்றுச்சுவர் அமைத்த பிறகு நீதிமன்றம் திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையொட்டி, ஸ்ரீபெரும்புதூர் புதிய நீதிமன்றத்துக்கு ₹58 லட்சத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கியது. இந்த பணிகள் முழுவதுமாக முடிந்தவுடன், புதிய நீதிமன்ற திறப்பு விழா நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள நீதிமன்ற கட்டிடத்தில், திறப்பு விழா நடத்துவதற்கு முன்னதாகவே ஆங்காங்கே சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இந்த கட்டிடம் இடிந்து விழும் நிலைக்கு மாறிவிடும் என வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து வழக்கறிஞர்கள் கூறுகையில், ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பல ஆண்டுகளாக வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் புதிய நீதிமன்ற கட்டிடம் கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. தற்போது இந்த கட்டிடத்தின் சுவர்களில் அங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது.

கட்டிட கான்ட்ராக்டர் தரமில்லாத கட்டிடத்தை கட்டி பல லட்சங்களை சுருட்டியுள்ளார். இதே நிலையில் இந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்தால், அடுத்த சில ஆண்டுகளில் சுவர்களில் பெரிய அளவிலான விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலைக்கு மாறிவிடும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக, கட்டிடத்தை பார்வையிட்டு, கட்டிட பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரரை பிடித்து, அதனை முறையாக சீரமைக்க வேண்டும். அசாம்பாவிதம் ஏற்பட்டால், அவரே பொறுப்பு என்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : court building ,opening ,
× RELATED பெரம்பலூரில் பெருமாள், சிவன் கோயில்கள் உண்டியல் திறப்பு