×

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக முதல்வர் அறிவித்தது வெற்று அறிவிப்பு

அந்தியூர், பிப்.19: காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக முதலமைச்சர் அறிவித்தது வெற்று அறிவிப்பு என சுப்பராயன் எம்.பி. குற்றம்சாட்டினார். ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அவர் பொதுமக்களை சந்தித்து நேற்று குறைகளைக் கேட்டறிந்தார். அரசு  மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டிடம் கட்ட தனது தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.50 லட்சம் ஏற்கனவே ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கான இடத்தை பார்வையிட்டார். வட்டாட்சியர், பேரூராட்சி அலுவலகம் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அதன்பின் சுப்பராயன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது: அந்தியூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மிகுந்த வறட்சியான பகுதி. மழைக்காலங்களில் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது, அந்த உபரி நீரை வாய்க்கால்கள் வழியாக கொண்டு வந்து அந்தியூர், அம்மாபேட்டை, பவானி ஒன்றியப் பகுதிகளை வளமான பகுதியாக மாற்றுவதற்கு முதலமைச்சரை நேரில் சந்தித்து பேசுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்த தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து கேட்டபோது, `ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் பலமான எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை டெல்டா பகுதிகள் முழுவதும் இந்த பிரச்னை உருவெடுத்துள்ளது.இதன்மூலம் உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுவிடும் என்ற ஆபத்தால் மக்கள் கிளர்ச்சி செய்கிறார்கள். அதில் இருந்து தப்பிப்பதற்காக இந்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்’ என்றார். இதில், இந்திய கம்யூனிஸ்ட் வடக்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், ம.தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் ராமன், அந்தியூர் பொறுப்பாளர் குணசேகரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags : Chief Minister ,area ,zone ,Cauvery Delta ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...