×

பணப்பலன்களை விரைந்து வழங்ககோரி ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, பிப்.18: போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய சட்டப்படியான  பணப்பலன்களை விரைவாக வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர்  கோவையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பள உயர்வுபடி 40 சதவீத சம்பள பாக்கி, விபத்தில்லா ஓட்டுநர் வெகுமதி  ஓய்வூதிய வழங்கல் ஆணை வழங்க தாமதப்படுத்துவது, சிக்கன கடன் சங்கத்தில்  பங்கு தொகை சேமிப்பு ஆகியவற்றை வழங்காமல் இருப்பதை கண்டித்தும், சட்டப்படியான பணப்பலன்களை  விரைந்து வழங்க கோரியும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மேட்டுப்பாளையம்  சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக கூட்டாண்மை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல  அமைப்பின் மண்டல தலைவர் பழனிசாமி, பொது செயலாளர் செல்வராசன், மாநில  நிர்வாகிகள் சேதுராமன், நடராஜன், சுரேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர். போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு 1998ம் ஆண்டு ஓய்வூதிய திட்டத்தின் படி அரசு ஊழியர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. மாறாக ஓய்வூதிய நம்பகம் அமைப்பின் மூலம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதனால் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடும் இன்னலுக்கு உள்ளாகின்றனர். அதேபோல இரண்டு விதமாக வழங்கப்படும் அகவிலைப்படியை முறைப்படுத்தி அகவிலைப்படி உயர்வு மற்றும் அதன் நிலுவைகளை வழங்கவேண்டும். போக்குவரத்து கழக ஓய்வூதியர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குடும்ப ஓய்வூதியர்களுக்கு பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதிய நிலுவைத்தொகைகளை வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து நிர்வாகிகள் விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Tags : transport workers ,
× RELATED அரசு போக்குவரத்து தொழிலாளர்களின்...