×

மதுக்கரையில் யானை நடமாட்டம் கண்காணிக்க 22 பேர் சிறப்பு குழு

கோவை, பிப். 19:  கோவை மதுக்கரை அருகே காட்டு யானை நடாமட்டம் கண்காணிக்க 22 பேர் அடங்கிய சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் காட்டு யானை நடமாட்டம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை மதுக்கரை, சுகுணாபுரம், சுந்தராபுரம், மாச்சம்பாளையம், குனியமுத்தூர் பகுதிகளில் சுற்றியது. இந்த யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து எட்டிமடை வனத்திற்குள் விரட்டியடித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஒற்றை ஆண் யானை ஒன்று பாலக்காடு ரோடு ராணுவமுகாம் அருகே உள்ள மடத்துக்காடு பகுதிக்கு வந்தது. பின்னர், அப்பகுதியில் இருந்த ஒரு தோட்டத்திற்குள் நுழைந்த வாழைகளை  ருசித்தது. யானை நடமாட்டம் குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானையை வனத்திற்குள் விரட்டியடித்தனர்.

இது குறித்து மதுக்கரை ரேஞ்சர் சீனிவாசன் கூறுகையில், ‘‘மடத்துக்காடு அருகே சுற்றிதிரிந்த யானை வனத்திற்குள் விரட்டியடிக்கப்பட்டது. இந்த யானை சுந்தராபுரம் பகுதியில் சுற்றிதிரிந்த யானையா என்பதை கண்டறிய முடியவில்லை. இந்நிலையில், யானை நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் வனக்காப்பாளர்கள், வனகாவலர்கள், வேட்டைத்தடுப்பு காவலர்கள் அடங்கிய 22 பேர் கொண்ட சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் யானை நடமாட்டம் தொடர்பாக இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர். கோவைப்புதூர், மதுக்கரை, மைல்கல், பாலக்காடு ரோடுகளில் யானை நடமாட்டம் தொடர்பாக தகவலறிந்தால் வனத்துறையினரை உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது,’’ என்றார்

Tags : Elephant Movement ,Madukarai ,
× RELATED கொடைக்கானலில் யானை நடமாட்டம்: மோயர்...