×

கனிமார்க்கெட்டில் தற்காலிக கடைகளுக்கு வாடகை கட்டணம் உயர்த்த எதிர்ப்பு

ஈரோடு, பிப். 19: ஈரோடு கனிமார்க்கெட்டில் தற்காலிக ஜவுளி கடைகளுக்கு வாடகை கட்டணம் உயர்த்த மாநகராட்சி முடிவுக்கு செய்துள்ளது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் கனிமார்க்கெட் ஜவுளிசந்தை செயல்பட்டு வருகிறது. இந்த ஜவுளிசந்தையில் 1,500க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து செல்கின்றனர். ஆனால், போதிய அடிப்படை வசதி இல்லாததால் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ரூ.51.59 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனால், ஏற்கனவே இங்கு கடை வைத்துள்ளவர்களுக்கு இதே பகுதியில் தற்காலிக கடைகள் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 187 தற்காலிக கடைகளும், ஏற்கனவே உள்ள 52 பழைய கடைகளும் உள்ளது. இந்த கடைகளுக்கு ஏற்கனவே ஏலம் விடப்பட்டு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்டுமான பணிகள் துவங்கி உள்ள நிலையில் ஏலம் ரத்து செய்யப்பட்டு விட்டது.

இதனால், மாநகராட்சி நிர்வாகம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. தற்போது இந்த கடைகளுக்கு சதுரஅடிக்கு 20 ரூபாய் வீதம் கட்டணம் நிர்ணயம் செய்து மாநகராட்சி நிர்வாகம் வசூலித்து வந்தது. இந்த கட்டணத்தை சதுரஅடிக்கு 80 ரூபாயாக உயர்த்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதனால் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடைகளுக்கான கட்டணத்தை சதுரஅடிக்கு 25 ரூபாய் என நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து நேற்று ஈரோடு கனிமார்க்கெட் தினசரி அனைத்து சிறு ஜவுளி வியாபாரிகள் சங்கம் சார்பில் முன்னாள் மண்டலக்குழு தலைவர் மனோகரன், சங்க தலைவர் நூர்சேட், செயலாளர் சேகர், பொருளாளர் தனபால் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவனிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது: மாநகராட்சி நிர்வாகம் மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்டி வருகிறது. இதனால், ஏற்கனவே இங்கு கடை வைத்திருந்தவர்களுக்கு தற்காலிக கடைகளை கட்டிக் கொடுத்துள்ளனர். நாங்கள் கடந்த 40 ஆண்டுகளாக கனிமார்க்கெட் பகுதியில் வியாபாரம் செய்து வருகிறோம். இதுவரை வாடகை நிலுவை இல்லாமல் செலுத்தி வருகிறோம். திறந்தவெளி கடைகளுக்கு சதுரஅடிக்கு 10 ரூபாய், 20 ரூபாய் என இருவிதமான கட்டணத்தை செலுத்தி வந்தோம். ஆண்டுக்கு 5 சதவீதம் வீதம் வாடகை உயர்வு கொடுத்து வந்தோம். தற்போது கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள தற்காலிக கடைகளுக்கு வழிப்பாதை இல்லாததால் வியாபாரமே இல்லை. மேலும், இந்த தற்காலிக கடைகளுக்கு மின் வசதிகளும் கிடையாது. இரவு நேரத்தில் இப் பகுதி இருள்சூழ்ந்து காணப்படுகிறது.

போதிய வருமானம் இல்லாத நிலையில் ஒரு சதுரஅடிக்கு 80 ரூபாய் நிர்ணயிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஒரு கடைக்கு வாடகை 8 ஆயிரம் ரூபாயாக உயர வாய்ப்புள்ளது. இந்த 8 ஆயிரம் ரூபாய்க்கு ஜிஎஸ்டியும் சேர்த்து செலுத்த வேண்டும் என கூறுகின்றனர். எங்கள் வாழ்வாதாரத்தை காக்க 20 ரூபாயுடன் 5 ரூபாய் சேர்த்து 25 ரூபாயாக கட்டணம் நிர்ணயிக்க வேண்டும். ஏற்கனவே, இங்கு கடை வைத்திருந்தவர்களுக்கு ஒரு கடை என நிர்ணயித்தார்கள். அதன்படி, கடையும் ஒதுக்கினார்கள். ஆனால், 2 நாட்கள், 3 நாட்கள் கடை பூட்டியிருந்தால் உடனே மாநகராட்சி அதிகாரிகள் கடையின் பூட்டை உடைத்து வேறு ஒருவருக்கு கடையை கொடுத்து விடுகிறார்கள். இதனால், வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் பாரபட்சம் பார்க்காமல் கடையை ஒதுக்கி தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த மனுவை பெற்றுக் கொண்ட ஆணையாளர் இளங்கோவன் அரசு விதிமுறைகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Tags : shops ,
× RELATED குடியிருப்பு பகுதிக்கு மத்தியில் தனிமை வார்டு அமைக்க எதிர்ப்பு