×

ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருக்குளத்தை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

திருவில்லிபுத்தூர், பிப். 18: திருவில்லிபுத்தூர் நகரில் பழமையும், பெருமையும் உடைய ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருக்குளம் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். திருவில்லிபுத்தூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது ஆண்டாள் கோயிலுக்குச் சொந்தமான திருமுக்குளம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நகரில் நிலத்தடி நீர்மட்டம் உயர இந்த குளம் காரணமாக உள்ளது. குளத்தில் நீர் இருந்தால் சுற்றுவட்டாரப் பகுதியில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலத்தடி நீர்மட்டம் எப்போதும் குறையாமல் இருக்கும். அந்தக் காலத்திலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குளிக்கவும், துணிகளை துவைக்கவும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். மழை இல்லாத போதும், வறட்சியான நேரத்திலும் திருவில்லிபுத்தூர் நகர மக்களுக்கு கை கொடுத்த இந்த குளத்தில் உட்புறத்தில் சிறிய அளவில் ஒரு குளமும் உள்ளது

இந்த குளத்தில் தான் எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் போது ஆண்டாள் விரதமிருக்கும் போது நீராட்டு வைபவத்தில் இக்குளத்தில் உள்ள நீரை எடுத்து பயன்படுத்துவார்கள். இந்த குளத்தில் தான் திருவிழாக்களின்போது ஆண்டாள் மற்றும் பெரிய பெருமாளுக்கு தீர்த்தவாரி வைபவம் இந்த நீரை எடுத்து தான் பயன்படுத்துவார்கள். அத்தகைய பெருமையும், சிறப்பும் உடைய இந்த குளத்தில் தற்போது குறைந்த அளவு நீர் உள்ளது. அதுவும் பாசி படர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. குளத்தின் படிக்கட்டுகள் மற்றும் சுற்றுச்சுவர்கள் பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகின்றன.

பல்வேறு சிறப்புகளை உடைய இந்த குளத்தை உடனடியாக சீரமைத்து தண்ணீர் தேக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென திருவில்லிபுத்தூர் நகர மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து ஆண்டாள் கோயில் நிர்வாக அதிகாரி இளங்கோவனிடம் கேட்டபோது, ஆண்டாள் கோயில் திருக்குளத்தை சீரமைக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவுபடி தொல்லியல் துறையின் அனுமதி பெற்று, மண்டல மற்றும் மாநில குழுவின் அனுமதியை பெற்றுள்ளோம். மேலும் பாரம்பரிய கமிட்டியின் அனுமதியைப் பெற்று மொத்தம் இதுவரை 4 கமிட்டிகளின் அனுமதியை பெற்றுள்ளோம். கட்டுமானப் பொறியாளரின் ஆய்வறிக்கை மதிப்பீடு முடிந்தவுடன் விரைவில் பணிகள் துவங்கும் என தெரிவித்தார்.

Tags : Thirukkulam ,Andal Temple ,
× RELATED கும்பகோணம் ஆதிவராகப்பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர தெப்போற்சவம்