×

வெயில் காலம் துவங்கியுள்ளதால் வெம்பக்கோட்டை அணையில் வேகமாக வற்றி வரும் தண்ணீர் விவசாயிகள் கவலை

சிவகாசி, பிப். 18: வெயில் காலம் துவங்கியுள்ளதால் வெம்பக்கோட்டை அணையின் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. தற்போது அணையில் 1 மீட்டருக்கும் குறைவான தண்ணீர் மட்டுமே உள்ளது. சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் வைப்பாற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 7.5 மீட்டர் ஆகும். இந்த அணை நீரை பயன்படுத்தி வெம்பக்கோட்டை, சூரார்பட்டி, கோட்டைபட்டி, கரிசல்குளம், சல்வார்பட்டி, ஏழாயிரம்பண்ணை உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 8 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பில் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதவிர அணையில் இருந்து சிவகாசி நகராட்சி பகுதிக்கு தினமும் 25 லட்சம் லிட்டர் குடிநீர் எடுத்துச்செல்லப்படுகிறது. அணையை சற்றியுள்ள கிராம பகுதி கிணற்று பாசன விவசாயத்திற்கும் நிலத்தடி நீர் ஆதாரமாக அணை நீர் உள்ளது. வடகிழக்கு பருவ மழையால் அணைக்கு 4 மீட்டர் வரை தண்ணீர் வந்தது. இதன் பின்னர் போதிய மழை பெய்யவில்லை. இதனால் அணை நீர்மட்டம் குறைய தொடங்கியது. இதனால் விவசாய பணிகள் பாதிப்படைந்தது. தற்போது கோடை காலம் முன் கூட்டியே தொடங்கியுள்ளதால் கடுமையான வெயில் நிலவி வருகிறது.

வெப்ப சலனம் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. பருவ மழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்த போதும் அணையின் நீர் பிடிப்பு பகுதியான வெம்பக்கோட்டை, சங்கரன்கோவில், திருவேங்கடம், பிளவக்கல் டேம், ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகளில் சரிவர மழை பெய்யவில்லை. அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து இல்லாததால் தற்போது அணையில் நீர் குறைந்து குட்டை போல் காட்சியளிக்கிறது. அணையின் நீர்மட்டம் 1 மீட்டருக்கும் குறைவாக உள்ளது. வெம்பக்கோட்டை அணை முழு கொள்ளளவை எட்டினால் விவசாயிகள் இரண்டு போகம் நெல் சாகுபடி பணியில் ஈடுபடுவர். இந்த ஆண்டு அணை நிரம்பாததால் ஒரு போக சாகுபடிக்கே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெயில் காலம் முன்கூட்டியே தொடங்கியுள்ளதால் அணை விரைவில் வறண்டு போகும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Tags : season ,Vembakkottai Dam ,
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு