திண்டுக்கல், பிப். 18: தமிழ் வளர்ச்சி மானியக் கோரிக்கை 2019-2020 அறிவிப்பையொட்டி வெளியிடப்பட்ட அரசாணையில் தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ம் நாளை நினைவுகூரும் வகையில் ஆட்சிமொழி சட்ட வாரம் ஆண்டுதோறும் ஒருவார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட வேண்டுமென ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்சிமொழி சட்ட வாரம் வரும் பிப்.21 முதல் பிப். 27ம் தேதி வரையிலான ஒரு வாரத்திற்கு கொண்டாடப்படவுள்ளது. ஆட்சிமொழி சட்ட வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் 12 மணிவரை நடைபெறும்.இந்த ஆட்சிமொழிச் சட்ட வார விழா தொடர்பான நிகழ்வில் பிப். 21 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை ஜி.டி.என்.கலைக்கல்லூரியில் ஆட்சிமொழி பட்டிமன்றமும், பிப். 22அன்று காலை 9.30 மணிக்கு விழிப்புணர்வு பேரணி மாநகராட்சி அலுவலகத்திலிருந்து தொடங்குகிறது.
மேலும் வருவாய்த்துறை சங்ககட்டிடமான பிச்சாண்டி மண்டபத்தில் பிப்.23 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகை வலியுறுத்துதல் தொடர்பில் வணிக நிறுவன உரிமையாளர்களுடன் கூட்டமும், பிப். 24 அன்று காலை 10 மணி முதல் 12 மணி ஆட்சிமொழி திட்ட விளக்க கூட்டம் தமிழாசிரியர்கள், தமிழமைப்புகளுடன் நடைபெறும்.பிப். 25 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை கணினி தமிழ் விழிப்புணர்வு கருத்தரங்கமும், பிப். 26 அன்று காலை 10 மணி முதல் 12 மணி ஆட்சிமொழி மின்காட்சியுரை அரசுப் பணியாளர்களுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் மற்றும் பிப். 27 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சிகள் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வனத்துறை அலுவலக கூட்ட அரங்கத்திலும் நடைபெறவுள்ளது.இந்த ஆட்சிமொழி சட்ட வார விழா பயிற்சியில் அரசு அலுவலகத்தில் பணியாற்றும் தட்டச்சர், இளநிலை உதவியாளர், உதவியாளர் கணினி நன்கு அறிந்த தொழில் நுட்பப் பணியாளர் ஆகியோரில் 2 நபர்களுக்கு குறையாமல் அனுப்பிட வேண்டும். வருகையை உறுதி செய்து இன்று பிப்.18ல் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் திண்டுக்கல் என்ற முகவரிக்கு பங்கேற்போர் பெயர் பட்டியல் கடிதம் மூலம் tamilvalardgl@tn.gov.in என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் தகவலுக்கு 0451-2461585 என்ற அலுவலக எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.