×

அழகேசபுரம், பொன்னகரத்தில் கழிவுநீர் கலந்து விநியோகம் மாசுபட்ட குடிநீரால் நோய் பரவும் அபாயம்

தூத்துக்குடி, பிப். 18: தூத்துக்குடி அழகேசபுரம், பொன்னகரம் பகுதிகளில் கழிவுநீர் கலந்து விநியோகம் செய்யப்படும் மாசுபட்ட குடிநீரால் நோய் பரவும் அபாயம் நிலவுவதாக அப்பகுதி பெண்கள் உள்ளிட்டோர் மாநகராட்சி  அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். தூத்துக்குடி நகரின் மத்தியில் அமைந்துள்ள  அழகேசபுரம், பொன்னகரம் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு  மாநகராட்சி  மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் கலங்கலாக வந்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அந்த  குடிநீருடன் கழிவுநீரும் கலந்து மாசுபட்ட நிலையில் கறுப்பு நிறத்தில் வந்துள்ளது. இது சுகாதார நிலையில் இருந்ததோடு துர்நாற்றம் வீசியது. இதனால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.  இதே போல் கடந்த 3 முதல் 4  மாதங்களாக கழிவுநீர் கலந்த குடிநீரே தங்கள் வீடுகளுக்கு  விநியோகிக்கப்பட்டு வருவதாக  அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சரமாரியாக குற்றம்சாட்டினர். மேலும் இதுகுறித்து பல முறை தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இதனால் ஆவேசமடைந்த அழகேசபுரம், பொன்னகரம் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மாநகராட்சி மூலம் நேற்று கழிவுநீருடன் கலந்து விநியோகிக்கப்பட்ட மாசுபட்ட குடிநீரை பாட்டில்களில்  பிடித்துக்கொண்டு மாநகராட்சி அலுவலகம் வந்தனர். பின்னர் அங்குள்ள அதிகாரிகளிடம் மாசுபட்ட குடிநீரை காண்பித்து புகார் கூறியதோடு மிகப்பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். இதையடுத்து அவர்களை சமரசப்படுத்திய வடக்கு மண்டல அதிகாரிகள், வேறு பைப்லைன் வாயிலாக சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட மக்கள், தங்களது புகாரை மனு வடிவில்  அளித்துவிட்டு அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

Tags : Ponnagara ,
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு