×

உடன்குடி பேரூராட்சி பகுதியில் தரமற்ற முறையில் சாலைகள் அமைப்பு?

உடன்குடி, பிப். 18: தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பேரூராட்சி, 1வது வார்டுக்கு உட்பட்ட சிவல்விளைபுதூர் பகுதியில் உள்ள சாலைகள் முறையான பராமரிப்பின்றி கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக உருக்குலைந்து கிடந்தது. இதனால் கிராம மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.  இதுகுறித்த கோரிக்கைகளை அடுத்து  உடன்குடி பேரூராட்சியின் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. ஆனால், உருக்குலைந்த பழைய சாலையைப் பெயர்த்தெடுத்து அதையே போட்டு புதிய சாலை தரமற்ற  முறையிலும் பல்வேறு குளறுபடிகளுடன் அமைக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.  மேலும் 2 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டபோதும் உரிய தொலைவுக்கு அமைக்காமல் மாற்றுப் பகுதியில் அமைத்து வருவதாகவும் புகார் தெரிவித்தனர். குறிப்பாக சாலைகள் அமைக்கப்படும் பகுதியில் உள்ள வடக்கு காலன்குடியிருப்பில் இருந்து ஜெ.ஜெ.நகர் செல்லும் இணைப்பு சாலை, மெய்யன்பிறப்பு பகுதியில் உள்ள ஒரு தெருவிலும் பாதி இடங்களில் சாலை அமைக்கப்படவில்லை. இதுகுறித்து பலதடவை அந்த பகுதிமக்கள் பேரூராட்சி நிர்வாகத்தினரிடம் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து சமூக ஆர்வலர் குணசீலன்வேலன் கூறுகையில், ‘‘சிவல்விளைபுதூர் பகுதியில் நடந்து வரும் சாலை அமைக்கும் பணி குறித்தும், ஒப்பந்தம் குறித்தும் எவ்வித அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. திட்ட மதிப்பீட்டுக்கான தொலைவுக்கு குறைவாகவே சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு ்ரூ. பல லட்சம் விரயம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அதையொட்டிய இணைப்புகளை போடாமல் சம்பந்தமில்லாத சாலைகளை போட்டு வருகின்றனர். மேலும் சிவல் விளைபுதூர் அய்யன்கோயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாலையோரங்களில் காணப்படும் பள்ளங்களால் விபத்து அபாயம் நிலவுகிறது. மேலும் அதிவேகமாக வரும் வாகனங்களால் சாலை விரைவில் சேதமடையவும் வாய்ப்புள்ளது. எனவே, உடனடியாக அப்பகுதியில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு வரும் சாலையை முறையாக ஆய்வு செய்து சீர் செய்ய வேண்டும்’’ என்றார்.

Tags : roads ,area ,
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...