×

பேச்சுவார்தை நடத்தியும் பிரச்னை தீரவில்லை தினசரி முட்டை விலை நிர்ணயத்துக்கு வியாபாரிகள் சங்கம் திடீர் எதிர்ப்பு

நாமக்கல், பிப்.18: முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக, கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு முறை அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்னை தீரவில்லை. தினசரி முட்டை விலை நிர்ணயத்துக்கு வியாபாரிகள் சங்கம் திடீரென எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். நாமக்கல் மண்டலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தினசரி முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் ஆதரவு அளித்தது. பண்ணைகளில், வியாபாரிகள் வாங்கி செல்லும் முட்டைவிலைக்கும் கடைகளில் விற்பனை செய்யப்படும், சில்லறை விலைக்கும் ₹1 வரை வித்தியாசம் இருப்பதால், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் முட்டை கிடைக்கும் வகையில் தினமும் முட்டை விலை நிர்ணயம், மைனஸ் இல்லாத விலை என என்இசிசி அறிவித்தது. இதன் மூலம் பண்ணையாளர்களும் லாபகரமாக தொழில் செய்யலாம் என என்இசிசி கூறியது. கடந்த இரு மாதத்துக்கு முன், என்சிசி சார்பில், கோழிப்பண்ணையாளர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் ஒரு சில பண்ணையாளர்கள் தினசரி முட்டை விலை நிர்ணயத்துக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் 12 நாட்கள் மட்டும் வாரத்துக்கு 3 முறை முட்டை விலையை என்சிசி நிர்ணயம் செய்தது. வியாபாரிகள் கூட்டணி போட்டு கொண்டு முட்டைவிலையை இஸ்டத்துக்கு குறைப்பதாக, முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனம் குற்றம்சாட்டியதால், மீண்டும் தினசரி முட்டை விலையை என்இசிசி நிர்ணயம் செய்ய தொடங்கிவிட்டது. இந்நிலையில் கடந்த 6ம் தேதி ஒரு சில பண்ணையாளர்கள் முட்டை விலை நிர்ணய குளறுபடி காரணமாக, நாமக்கல்லில் உள்ள என்இசிசி மண்டல அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்டினார்கள். இது குறித்து என்இசிசி மேலாளர் பாலசுப்பிரமணியம், போலீசில் புகார் அளித்தார். 12 பண்ணையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து கடந்த வாரம் கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு நாட்கள் அவசர கோலத்தில், மாவட்ட நிர்வாகம் அமைதி பேச்சுவார்த்தை என்ற பெயரில் இரண்டு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம், என்இசிசி நிர்வாகிகளை அழைத்து பேசியது. இதில் 3 தரப்பினரும் ஏற்றுகொள்ளும் வகையில் ஒரு சில முடிவுகள் எடுக்கப்பட்டது.

இதையடுத்து என்இசிசி சேர்மன் டாக்டர் செல்வராஜ், முட்டை விலை நிர்ணய குழுவில் மேலும் 24 பண்ணையாளர்களை சேர்த்து அவர்களின் கருத்து கேட்டு முட்டை விலை நிர்ணயம் செய்யப்படும் என அறிவித்தார். அதன் படி நேற்று, புதியதாக 24 பண்ணையாளர்கள் சேர்க்கப்பட்டு என்இசிசி முட்டை விலையை அறிவித்தது. ஆனால், நேற்று திடீரென முட்டை வியாபாரிகள் சிலர்,  நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து கலெக்டர் மெகராஜை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதன் விபரம்: முட்டைகளை பண்ணையில் இருந்து வாங்கி, வெளி மாவட்டம், வெளி மாநிலம் அனுப்பிவைக்க 3 நாட்கள் ஆகிறது. பண்ணைகளில் முட்டை வாங்கும் போது ஒரு விலையும், விற்பனை செய்யும் போது ஒரு விலையும் இருப்பதால், எந்த விலைக்கு முட்டை விற்பனை செய்வது என்ற பிரச்னை ஏற்படுகிறது. வாரம் 3 விலை இருந்தால் லைன் வியாபாரிகள் 3 நாட்களுக்கு தேவையான முட்டைகளை வாங்குவார்கள். தினசரி விலை வரும் போது, தேவைக்கு மட்டுமே வாங்குகிறார்கள். இதனால் பண்ணைகளில் உள்ள முட்டைகளை எங்களால் முழுமையாக வாங்கி செல்லமுடியவில்லை. இதனால் பண்ணையாளர்களுக்கும், எங்களுக்கும் பெரும் நஸ்டம் ஏற்படுகிறது.
முட்டை விலை உயர்ந்தால், லைன் வியாபாரிகள் அந்த விலையை தர மறுக்கிறார்கள். ஆனால் என்இசிசி விலையை குறைக்கும் போது, உடனடியாக முட்டை விலையை குறைத்து விடுகிறார்கள். இப்படி பல பிரச்சனைகள் முட்டை விற்பனையில் நிலவுகிறது. எனவே ஏற்கனவே பல ஆண்டாக நடைமுறையில் இருந்த படி, வாரம் 3 நாட்கள் மட்டும் என்இசிசி முட்டைக்கு விலை  நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.மாவட்ட நிர்வாகம் கடந்த வாரம் நடத்திய அமைதி பேச்சுவார்த்தையின் போது, முட்டை வியாபாரிகள் சங்க தலைவரும் கலந்து கொண்டார். ஆனால் அப்போது இந்த பிரச்சனை எழவில்லை. தற்போது திடீரென முட்டை வியாபாரிகள் பொதுக்குழு கூட்டம் போட்டு தீர்மானம் நிறைவேற்றி, கலெக்டரிடம் அளித்துள்ளனர்.

Tags : traders ,
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...