எலச்சிப்பாளையத்தில் காவிரி-திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு, பிப்.18: காவிரி-திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை வலியுறுத்தி, எலச்சிப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் திரளாக பங்கேற்றனர். காவிரி பொன்னி ஆறு, திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில், திருச்செங்கோடு அருகே எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் சுந்தரம் தலைமை தாங்கினார். மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டிய பின்பு வரும் உபரி நீரை பொன்னி ஆறு மற்றும் திருமணிமுத்தாற்றுக்கு திருப்பி விட்டால், நாமக்கல் மாவட்டம் முழுவதும் பயன்பெறும் என்ற கருத்தை கடந்த 60 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர் நாமக்கல் மாவட்ட விவசாயிகள். இதனை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் எலச்சிபாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு எலச்சிப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை அடைந்தனர். அங்கு, கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. முடிவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சுந்தரம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் காவிரி ஆறு, பொன்னியாறு, திருமணிமுத்தாறுகளில் கலக்குமாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 60 ஆண்டுகளாக போராடி வருகிறோம். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இந்த திட்டத்தை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அவரது வழியில் நடக்கும் தற்போதைய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த எந்த  நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. அதனை கருத்தில் கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறோம். முதற்கட்டமாக எலச்சிப்பாளையத்தில் இந்த ஆர்ப்பாட்டம்  நடைபெற்றுள்ளது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் திட்டம் நிறைவேறும் வரை ஆர்ப்பாட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு காவிரி ஆறு  -திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: