×

மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.210 கோடி மோசடி கலெக்டரிடம் பரபரப்பு புகார்

தஞ்சை, பிப். 18: மகாத்மா காந்தி தேசிய 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் ரூ.210 கோடி மோசடி நடந்துள்ளதாக குறைதீர் கூட்டத்தில் பத்து ரூபாய் இயக்கம் சார்பில் பரபரப்பு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கோவிந்தராவ் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பத்து ரூபாய் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காந்தாராவ் ராசு உள்ளிட்டோர் அளித்த மனு: மகாத்மா காந்தி தேசிய 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய நிதி மோசடி நடந்துள்ளது என மத்திய அரசின் சமூக தணிக்கை அறிக்கையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் ரூ.210 கோடி மோசடி நடந்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளர் விவேகானந்தன், வடக்கு மாவட்ட செயலாளர் காமராஜன் உள்ளிட்டோர் அளித்த மனு: குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் என்ற 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அரசாணை வெளியிட வேண்டுமென பல ஆண்டுகளாக தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் போராடி வருகின்றனர். இந்த கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தொடர்ச்சியாக முன்னாள் மற்றும் இந்நாள் தமிழக முதல்வர்களை சந்தித்து மனு அளித்துள்ளோம். கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு விதமான அறப்போராட்டங்களை நடத்தி அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். ஆனால் அரசு ஆய்வுக்குழு மட்டும் அமைத்து விட்டு நடவடிக்கை இல்லாமல் அமைதியாகி விட்டது.

இதனால் கோரிக்கையை தீவிரப்படுத்தும் விதமாக கடந்தாண்டு நவம்பர் 10ம் தேதி முதல் தமமுக சார்பில் தேவேந்திரகுல வேளாளர் அரசாரணை கிடைக்கும் வரை கருப்பு சட்டை மட்டுமே அணிவது என முடிவெடுத்து கடந்த 100 நாட்களாக தமிழகம் முழுவதும் கருப்பு சட்டை அணிந்து கோரிக்கை எழுப்பி வருகிறோம். இன்று (நேற்று) கருப்பு சட்டை போராட்டத்தின் 100வது நாளில் தமிழகத்தில் அனைத்து கலெக்டரிடமும் மனு அளித்து அதன்மூலம் எங்களது போராட்டம், கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்துகிறோம். இனியும் காலதாமதம் செய்யாமல் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து 7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் வெற்றி அளித்த மனு: தஞ்சை மாநகராட்சி நிர்வாக கட்டுப்பாட்டில் சமீபத்தில் காவிரி நகர் அருகே தற்காலிக காய்கறி மார்க்கெட் திறக்கப்பட்டுள்ளது.

இந்த மார்க்கெட்டின் முன்புறம் சாலையோரத்தில் திடீரென தோன்றியுள்ள பெட்டி கடைகள், பழக்கடைகளால் போக்குவரத்துக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்களுக்கும் பெரும் இடையூறாக அமைந்துள்ளது. மேலும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள இந்த தற்காலிக காய்கறி மார்க்கெட் அருகில் கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமும், மார்க்கெட் எதிரில் டாஸ்மாக் கடையும் அமைந்துள்ளது. இந்த சாலை ஏற்கனவே விபத்துகள் அதிகம் நடைபெறும் சாலையாகும். இது மாதாக்கோட்டை மற்றும் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையை இணைக்கும் சாலையாகும். இந்நிலையில் மார்க்கெட்டில் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காய்கறி வாங்க குவிந்து வருகின்றனர்.அவர்கள் வரும் வாகனங்களை வைக்க இடமின்றி தவிக்கின்றனர். ஆனால் எந்தவித அனுமதியின்றி மார்க்கெட் நுழைவுவாயில் முன் பகுதியில் சாலையோரத்தில் திடீரென கடைகள் முளைத்துள்ளன. இதற்கு சில மாநகராட்சி அதிகாரிகளே உடந்தையாக உள்ளனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் சாலை விபத்துகள் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. இவ்வாறு சாலை விபத்து ஏற்பட்டால் அதற்கு மாநகராட்சி அதிகாரிகளே முழு பொறுப்பேற்க வேண்டும். எனவே உடனடியாக அனுமதியின்றி திடீரென தோன்றியுள்ள சாலையோர கடைகளை அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.திருவையாறு தாலுகா கோனேரிராஜபுரம் வீரராஜேந்திரன் மற்றும் விவசாயிகள் அளித்த மனு: திருவையாறு வட்டத்தில் சம்பா, தாளடி பருவத்தில் 11,000 எக்டேரில் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் நடந்து வருகிறது. கோனேரிராஜபுரத்தில் அறுவடை பணிகள் துவங்கவுள்ளது.

மேலும் கருப்பூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஏராளமான விவசாயிகள் நெல்லை கொட்டி மூடி வைத்துள்ளனர். எனவே போதுமான எண்ணிக்கையில் இப்பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.ஒரத்தநாடு அருகே சத்திரப்பட்டி ஊரணிபுரத்தை சேர்ந்த இளங்கோவன் மனைவி தமயந்தி தலைமையில் பெண்கள் அளித்த மனு: சத்திரப்பட்டி பகுதியில் பொதுமக்கள், விவசாயிகளிடம் ரூ.12,500, ரூ.25 ஆயிரம் செலுத்தினால் ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் வட்டியில்லா கடன் பெற்று தருவதாக அறக்கட்டளை ஒன்றின் பெயரில் பணம் வசூல் செய்தனர். புதிய பேருந்து நிலையம் பகுதியில் செயல்பட்ட இந்த அறக்கட்டளையில் 1,000க்கும் மேற்பட்டோர் பல ஆயிரக்கணக்கான பணத்தை செலுத்தினர். இதன்மூலம் பல கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்துள்ளது. ஆனால் கடன் பெற்று தரவில்லை. தற்போது அந்த அலுவலகமும் பூட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. இதில் சில அரசியல் பலமுள்ளவர்களும் ஈடுபட்டுள்ளனர். எனவே அறக்கட்டளை உரிமையாளர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களிடம் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்து பணத்தை மீட்டு தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...