×

தஞ்சை நகர பேருந்து கோவிலூர் வரை நீட்டிப்பு

அரியலூர், பிப்.18: கோவிலூர் மக்களின் பத்தாண்டு கோரிக்கையான தஞ்சாவூர் நகரப்பேருந்து சேவை ஆண்டிப்பட்டாக்காடு, கோவிலூர் வரை விரிவாக்கம் செய்து புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்டதால் ஏலாக்குறிச்சியில் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் ஏலாக்குறிச்சி அருகே உள்ள கிராமங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டிப்பட்டாக்காடு-கோவிலூர் வழித்தடத்தில் தஞ்சாவூரிலிருந்து ஏலாக்குறிச்சி வரை வரும் பேருந்தினை 8 கி.மீ தூரத்திற்கு நீட்டித்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. பேருந்து வசதி ஏற்படுத்தி தரக்கோரி பொதுமக்கள் தொடர் போராட்டம் மற்றும் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் மற்றும் அரசுப் போக்குவரத்து கழக தஞ்சை கோட்ட மேலாளர் ஒப்புதலோடு காலை, மாலை என இரு நேரத்திற்கு நேற்று முதல் தஞ்சாவூர் நகரப்பேருந்து சேவை ஆண்டிப்பட்டாக்காடு, கோவிலூர் வரை விரிவாக்கம் செய்து இயக்கப்படுகிறது.

இந்த பேருந்து இயக்கப்படுவதனால் பயன்பெறும் கோவிலூர், ஆண்டிப்பட்டாக்காடு, சிலுப்பனூர், புத்தூர், வல்லகுளம், சுண்டகுடி, ஆலந்துறையார்கட்டளை, ஓட்டக்கோவில், சின்னப்பட்டாக்காடு, பெரியப்பட்டாக்காடு பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கை நேற்று முதல் நிறைவேறி உள்ளது. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புதிய வழித்தடத்தில் இயங்கும் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு சால்வை அணிவித்து வரவேற்று இந்த வசதியை ஏற்படுத்தித் தந்த அனைத்து அதிகாரிகளுக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் பாலகிருஷ்ணன் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டு புதிய வழித்தடத்தில் இயங்கும் பேருந்தை வரவேற்றனர். மேலும் இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்களது கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள்15 க்கும் மேற்பட்டோர் மிகுந்த சிரமத்துடன் தஞ்சையில் உள்ள குந்தவை நாச்சியார் அரசு கல்லூரிக்கு சென்று படித்து வந்தனர். இனி அவர்கள் சிரமமின்றி சென்று வருவார்கள் என மகிழ்ச்சியுடன் கூறினர். மேலும் கூலித்தொழிலாளர்கள் பலரும் வேலைக்குச் சென்று வர வசதியாக இருக்கும் என கூறினர்.

Tags : Thanjavur City Bus ,Kovilur ,
× RELATED அய்யலூர் சந்தையில் தக்காளி பெட்டி ரூ.300...