×

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நெய்வேலியில் 1000 கடைகளை அடைத்து வணிகர்கள் போராட்டம்

நெய்வேலி, பிப். 18:  நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதனை கடுமையாக எதிர்த்து இஸ்லாமிய அமைப்புகள், அனைத்து கட்சியினர் சாலை மறியல், காத்திருப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் என தொடர்ந்து நடத்தி வருகின்றன. இந்நிலையில் சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 14ம் தேதி போராடிய பெண்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையை கண்டித்தும், மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், அதற்கு துணைபோகும் மாநில அதிமுக அரசை கண்டித்தும், தமிழகத்தில் தேசிய குடியுரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் கடலூர் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நெய்வேலியில் நேற்று வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தை நடத்தினர். இதையொட்டி மந்தாரக்குப்பம், கங்கைகொண்டான் பேரூராட்சி உள்ளடக்கிய பெரியாக்குறிச்சி கடை வீதியில் இருந்து ரோமாபுரி வரை வர்த்தக சங்கங்களின் ஆதரவுடன் நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Tags : shops ,Neyveli ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி