×

கஞ்சித்தொட்டிமுனை பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடைக்குள் வந்து பயணிகளை ஏற்றி சென்ற பேருந்துகள்

சிதம்பரம், பிப். 18:  சிதம்பரம் நகரின் மேலவீதியில் உள்ள கஞ்சிதொட்டி பஸ் நிறுத்தத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்த பயணியர் நிழற்குடை சென்னை போன்ற நகரங்களில் உள்ளதைப் போல மிகவும் உயரமாகவும், பெரிதாகவும் அமைக்கப்பட்டது. அதற்குள் பேருந்துகள் வந்து பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் கட்டப்பட்டிருந்தது. ஆனால் இந்த பயணிகள் நிழற்குடை பயன்பாட்டுக்கு வந்த நாள் முதலே பேருந்துகள் நிழற்குடைக்குள் வருவதில்லை. பயணிகள் நிழற்குடை வெளியிலேயே நின்று கொண்டு, பயணிகளை ஏற்றிச் செல்கிறது. இதனால் பல நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக ஒரு பேருந்து இந்த இடத்தில் நின்று பயணிகளை ஏற்றும்போது மற்றொரு பஸ் பின்னால் வந்தால் போக வழியில்லாமல் அங்கேயே நிற்கிறது. இதனால் இரு மார்க்கத்திலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி கார்த்திகேயன் நேற்று அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார். கஞ்சித்தொட்டி பஸ் நிறுத்தத்திற்கு வந்த அவர், பயணிகள் நிழற்குடைக்குள் இருந்த உட்காரும் நாற்காலிகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டு அங்கிருந்த இரு சக்கர வாகனங்களை அப்புறப்படுத்த செய்தார். பின்னர் சாலையில் பேரிகார்டு அமைத்து, அங்கிருந்த பயணிகளை நிழற்குடைக்குள் சென்று ஓரமாக நிற்கும்படி அறிவுரை கூறினார். இதையடுத்து அந்த வழியாக வந்த பேருந்துகளை பயணிகள் நிழற்குடைக்கு உள்ளே சென்று நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லுமாறு அறிவுரை வழங்கினார். இதையடுத்து அந்த வழியாக வந்த அனைத்து பேருந்துகளும் பயணியர் நிழற்குடை உள்ளே சென்று நிறுத்தப்பட்டு, பயணிகளை ஏற்றிச் செல்கிறது. இதனால் சிதம்பரம் கஞ்சித்தொட்டி, மேலவீதி, வடக்கு மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது.

Tags : bus stop ,passenger lane ,Kanjithottimunai ,
× RELATED 1.5 டன் ரேஷன் அரிசி கடத்தியவர்கள் கைது