×

சுருக்கு கம்பியில் புலி சிக்கிய விவகாரம் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் தோட்ட உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

ஊட்டி,பிப்.18:  கோத்தகிரி அருகே உயிலட்டி பகுதியில் விவசாய தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த சுருக்கு கம்பியில் புலி சிக்கிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தோட்ட உரிமையாளர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட கோத்தகிரி வனச்சரகத்திற்குட்பட்ட உயிலட்டி பகுதியில் தேயிலை தோட்டம் மற்றும் காய்கறி விவசாய நிலத்தை ஒட்டி ஓடை பகுதியில் கடந்த 15ம் தேதி அதிகாலை விவசாய நிலத்தில் வைக்கப்பட்டிருந்த சுருக்கு கம்பியில் புலி ஒன்று சிக்கி கொண்டது. இத்தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அதனை மயக்க மருந்து செலுத்தி அதனை விடுவிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டிருந்தபோது, புலி தானாகவே சுருக்கில் இருந்து விடுவித்துக் கொண்டு வனத்திற்குள் சென்றது. இந்நிலையில் அப்பகுதியில் முகாமிட்டிருந்த வனத்துறை அதிகாரிகள், டி.ஆர்.ஒ., ஆர்.டி.ஒ. உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, பல இடங்களில் வன விலங்குகளை வேட்டையாடும் நோக்கில் சுருக்கு கம்பிகள் வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் உயிலட்டி பகுதியில் இரண்டு புலிகளை பார்த்ததாக பொதுமக்கள் கூறியதை தொடர்ந்து வனத்துறையினர் தொடர்ந்து முகாமிட்டு புலியை கண்காணித்து வருகின்றனர். இதுதவிர கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. உதவி வன பாதுகாலர் சரவணகுமார் தலைமையில், நேற்று வனத்துறையினர் ஆளில்லா பறக்கும் கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர். இது குறித்து நீலகிரி வன கோட்ட மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா கூறுகையில், உயிலட்டி பகுதியில் சுருக்கு கம்பியில் சிக்கிய புலிக்கு பெரிய அளவில் காயம் ஏதுவும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் அப்பகுதியில் புலியின் நடமாட்டம் குறித்து அறிந்து கொள்வதற்காக 2 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர சோதனை அடிப்படையில் டிரோன் மூலம் வனப்பகுதி கண்காணிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட விவசாய நிலத்தில் வருவாய்துறை அதிகாரிகள், வனத்துறையினர் உள்ளிட்டோர் ஆய்வு செய்ததில் பல இடங்களில் சுருக்கு கம்பிகள் பொருத்தப்பட்டிருந்து. இது தொடர்பாக தோட்ட உரிமையாளர் நஞ்சுண்டன் என்பவர் மீது, வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்படுவார். கோத்தகிரி வன கோட்ட பகுதிகளில் புலி நடமாட்டம் குறித்து அறிந்து கொள்வதற்காக 18 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, என்றார்.

Tags : affair ,estate owner ,
× RELATED வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள்...