×

சீரான குடிநீர் விநியோகிக்க கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை

குன்னூர்,பிப்.18: குன்னூரில் நகராட்சிப்பகுதிகளில் கடந்த  ஒரு மாதமாக முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குன்னூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது. இங்கு சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. தற்போது அணையில் போதுமான தண்ணீர் இருப்பு இருந்தும், குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. கடந்த 24 நாட்களாக நகரில் தண்ணீர் விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.  குடிநீர் தேவைக்காக நீண்ட தூரம் சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. வசதி படைத்தவர்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். ஏழை,எளிய மக்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.
குடிநீர் பிரச்னையால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், நேற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் குன்னூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதிகாரிகளிடம் குடிநீர் முறையாக வழங்காததால் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதாக குற்றம் சாட்டினர்.

ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தண்ணீரை முழுமையாக வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.   இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஆண்டு முழுவதும் குன்னூர் மக்கள் குடிநீர் தேவைக்கு கடும் அவதியடைந்து வருகின்றனர். நகராட்சியில் முறையான கட்டமைப்புகள்  இல்லை எனக்கூறி 25 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்கின்றனர். பொது மக்கள் உயிர் வாழ  அடிப்படை தேவைகளில் ஒன்றான குடிநீரை கூட வழங்க முடியாமல் நகராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவதாக ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் குன்னூரில்தண்ணீர் பிரச்னையை சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்காமல்  காலம் தாழ்த்தி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால்  சீரான குடிநீர் விநியோகிக்க கோரி மிகப்பெரிய  போராட்டம் நடத்துவோம் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த சம்பவத்தால் குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Siege ,office ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...