×

3 பேர் படுகாயம் விவசாயிகள் குறைந்த செலவில் கூடுதல் லாபம் அடைய எள் சாகுபடி செய்யலாம் வேளாண்மை உதவி இயக்குநர் ஆலோசனை

வலங்கைமான், பிப்.18: விவசாயிகள் குறைந்த செலவில் குறைந்த நாட்களில் கூடுதல் லாபம் பெறுவதற்கு ஏற்ற பயிரான எள் சாகுபடி செய்து பயன்பெற விவசாயிகளுக்கு வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் அழைப்பு விடுத்துள்ளார்.இளைத்தனுக்கு எள் என்பது பழமொழி, மேலும் எள் சாகுபடி செய்தால் அடுத்த பயிர் சரியாக வராது என எண்ணுவது தவறான கருத்து. உழைப்பை கொடுப்பவர்கள் அதிகம் உண்ண வேண்டும். அதுபோல நிலத்தில் பயிர் சாகுபடி செய்யும் போது பயிருக்கு தேவையான உரம் அளிக்கப்பட வேண்டும். ஆனால் எள் சாகுபடி செய்யும்போது பொதுவாக நாம் உரம் இடுவதில்லை. அப்போது தனக்கு தேவையான சத்துகளை வயலில் ஏற்கனவே இருக்கும் சத்துகளிலிருந்து எடுத்துக்கொள்வதால் நிலத்தில் சத்துப் பற்றாக்குறை ஏற்படுவதுதான் உண்மையான காரணமாகும். எள் பயிரானது எண்ணெய் வித்துப் பயிர்களில் மிகவும் முக்கியமான மற்றும் பாரம்பரியமான ஒன்றாகும். இதை தனி பயிராகவும் மற்றும் கலப்பு பயிராகவும் விதைப்பு செய்யலாம். எள்ளானது நிலத்தில் எஞ்சியுள்ள ஈரத்தன்மையை பயன்படுத்தி வறட்சியைத் தாங்கி வளரக் கூடிய தன்மையுடையதாகும்.

நிலத்தை ஆழ உழுது, கடைசி உழுவின் போது 5 டன் தொழு உரம், 4 பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் 4 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா கலந்து மண்ணில் இடவும். நிலத்தில் நீர் தேங்காதவாறு சமன் செய்திட வேண்டும். கோ-1, டி.எம்.வி-4 ஆகியவை ஏற்ற ரகங்களாகும். அதை மண்ணில் கலந்து சீராக 1 அடிக்கு 1 அடி பயிர் இடைவெளியில் ஏக்கருக்கு 2 கிலோ வீதம் விதைக்க வேண்டும். முன்னதாக ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி உயிர் பூஞ்சானம் மருந்து இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் கலந்து விதைகளை விதை நேர்த்தி செய்து விதைப்பது நல்லது. விதைத்த 3 நாள் கழித்து உயிர் நீர்விட வேண்டும். பின்பு 15ம் நாள் ஒருமுறையும், பூக்கும் தருணம் மற்றும் காய் பிடிக்கும் தருணத்தில் ஒருமுறையும் நீர் பாய்ச்சினால் போதும். களி மண்ணாக இருக்கும் நேரத்தில் நிலத்தில் வாய்க்கால் கிழித்து தண்ணீரை தட்டு வைத்து பயிருக்கு எத்திவிடுவது சிறந்தது. மேலும் மண்ணின் தன்மையை ஆய்வு செய்து அதற்கு ஏற்ப உரம் இடுவது நல்லது.தொடர்ச்சியாக நெல்லை சாகுபடி செய்யாமல் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்வது சிறந்த பயிர் சுழற்சி முறையாகும். இதனால் மண்ணின் தன்மை மேம்படும், மண்ணின் நீர் பிடிப்பு திறன் அதிகரிக்கும் மற்றும் விவசாயிகளுக்கு கணிசமான வருமானத்தை தரும் என கூறியுள்ளார்.

Tags :
× RELATED தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி...