×

மழையில்லாததால் நீர்வரத்து குறைவு தேக்கடியில் படகு சவாரிக்கு சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்

கூடலூர், பிப். 17: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இருப்பினும், தேக்கடி ஏரியில் படகுச்சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கேரள மாநிலத்தில் உள்ள சர்வதேச சுற்றுலாத்தலமான தேக்கடிக்கு, நமது நாட்டின் பல மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக வருகின்றனர். தேக்கடியில் யானைச் சவாரி, டைகர் வியூ, நேச்சர் வாக், பார்டர் வாக், மூங்கில் படகு சவாரி என பல பொழுது போக்கு விஷயங்கள் உள்ளன. இருப்பினும் படகுச்சவாரியின் போது நீர்நிலைகளுக்கு வரும் யானைகள், மான்கள், காட்டெருமை கூட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவையினங்களை காணலாம். இதனால், சுற்றுலாப்பயணிகள் விருப்பத்தில் படகுச்சவாரி முதலிடம் பெறுகிறது.

தேக்கடி ஏரியில் தற்போது கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கேரள வனத்துறை சார்பில் 6 படகுகள் இயக்கப்படுகின்றன. தற்போது பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாததால் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் குறைந்துள்ளது. இதனால், அணையின் நீர்மட்டமும் 116 அடிக்கு கீழே குறைந்துள்ளது. இருப்பினும் விடுமுறை நாட்களில் தேக்கடி ஏரியில் படகுச்சவாரி செல்ல சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். விடுமுறையான நேற்று தேக்கடி படகுத்துறையில் படகு சவாரிக்கு சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

Tags : Thekkady ,
× RELATED தேக்கடி ஏரியை நீந்தி கடந்த புலி படகு சவாரியில் பார்த்து ரசித்தனர்