×

இளையான்குடியில் பருத்தி நடவு மும்முரம்


இளையான்குடி,  பிப்.17: இளையான்குடி பகுதியில் பருத்தி விதைகளை நடவு செய்யும் பணியில், விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இளையான்குடி பகுதிகளுக்கு உட்பட்ட சாலைக்கிராமம், சூராணம், சாத்தனூர், அளவிடங்கான், விசவனூர், கோட்டையூர், சாத்தணி, கீழநெட்டூர், கலைக்குளம் ஆகிய பகுதிகளில் நடப்பாண்டிற்குரிய பருத்தி சாகுபடி செய்வதற்கு அப்பகுதி விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வடகிழக்கு பருவமழையின் காரணமாக கண்மாய், ஊருணி, பண்ணைக்குட்டை ஆகியவற்றில் மழைநீர் தேங்கியுள்ளதால், அறுவடை செய்த நெல் வயலில், பருத்தி விதைகளை விவசாயிகள் நடவு செய்து வருகின்றனர். ஏக்கருக்கு 3 கிலோ பருத்தி விதைகள் வீதம் நடவு செய்து வருகின்றனர். கண்மாய் தண்ணீரில் நடவு செய்த நாட்களிலிருந்து  4வது நாளில் மண்ணிலிருந்து வெளிவரும் பருத்தி செடி, ஆழ்துளை கிணற்று தண்ணீரில் நடவு செய்வதால் 10 நாட்கள் ஆகிறது.

வேளாண்மைத்துறையின் சரியான பரிந்துரை இல்லாததால் முளைப்புத்திறன் அதிகமுள்ள பருத்தி விதைகளை வாங்குவதில் இளையான்குடி பகுதி விவசாயிகள் கடும் சிரமப்படுகின்றனர். அதனால் பருத்தி சாகுபடியில் நல்ல மகசூல் எடுக்க முடியாமல் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் பெருத்த நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் எந்த மண்ணிற்கு எந்தவிதமான பருத்தி விதைகள் நடவு செய்யலாம் என தெரியாததால், விவசாயிகள் பல ஆண்டுகளாக பெருத்த நஷ்டமடைந்து வருகின்றனர். காய்புழு, வேர்பூச்சி, பூ உதிர்வு ஆகிய காரணங்களுக்கு தெளிவான தீர்வு கிடைக்காததால், பூச்சிமருந்து கடைகளில் கேட்டு வாங்கி தெளிக்கின்றனர். அதனால் உவர்ப்பு ற்றும் கரிசல்மண் தன்மைக்கு ஏற்ப  எந்த பருத்தி விதைகளை நடவு செய்யலாம், எந்த மருந்துகளை தெளிக்கலாம் என, விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : cotton plantation ,
× RELATED இளையான்குடி ரேஷன்கடையில் பொங்கல் பொருட்கள் விநியோகம்