×

‘அந்த கடையிலதான் கருவி வாங்கணும்’ கமிஷனே கண்ணாக செயல்படும் ேபாலீசார் வாகன ஓட்டிகள் புகார்

சிவகங்கை, பிப்.17: வாகனங்களில் ஏற்கனவே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தியிருந்தாலும் அதை அகற்றிவிட்டு புதிய கருவி குறிப்பிட்ட இடத்தில் வாங்க வேண்டும் என நிர்ப்பந்திப்பதாக புகார் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை ஆகிய இரண்டு இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. சிவகங்கை அலுவலகத்தில் சுமார் ஐந்து தாலுகாக்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் லைசென்ஸ் பெறுகின்றனர். மேலும் கனரக வாகனங்கள், வேன், சிறிய லோடு வேன் உள்ளிட்டவைகளுக்கு எப்சி சான்றிதழ் வழங்கும் பணியும் இங்கு நடக்கும். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எப்சி சான்றிதழ் பெற வரும் வாகன உரிமையாளர்களிடம் வேகக்கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என போக்குவரத்து அலுவலகம் சார்பில் கூறப்படுகிறது. இதையடுத்து வாகன உரிமையாளர்கள் இக்கருவியை வாங்கி பொருத்தினர்.

இந்நிலையில் தற்போது வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ள வாகனங்களில் அதை அகற்றிவிட்டு புதிதாக கருவி பொருத்த வேண்டும் என சிவகங்கை போக்குவரத்து அலுவலகம் சார்பில் கூறப்படுகிறது. அந்த கருவிகள் மதுரை உள்ளிட்ட ஊர்களில் வாங்கி வந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. சிவகங்கையில் குறிப்பிட்ட இரண்டு இடங்களில் வாங்கி வந்து பொருத்தினால் மட்டுமே ஏற்றுக்கொள்வோம் என கூறுகின்றனர். வெளியிடங்களில் ரூ.3 ஆயிரத்திற்கும் விற்கப்படும் இந்த வேகக்கட்டுப்பாட்டு கருவி, சிவகங்கையில் ரூ.6 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
 கடந்த இரண்டு ஆண்களுக்குள் பொருத்தப்பட்ட கருவியை ஏன் மாற்ற வேண்டும் அல்லது ரூ.3 ஆயிரம் எதற்கு கூடுதலாக செலவு செய்து சிவகங்கையில் குறிப்பிட்ட இடத்தில் வாங்க வேண்டும் என வாகன உரிமையாளர்கள் கேட்டாலும் அதற்கு பதில் இல்லை. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சில அலுவலர்களுக்கு வேகக்கட்டுப்பாட்டு கருவி விற்பதில் கமிஷன் வழங்கப்படுவதால் இவ்வாறு நிர்ப்பந்தம் செய்கின்றனர் என வாகன உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அவர்கள் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் தான் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தினோம். அதை மாற்ற சொல்கின்றனர். தினந்தோறும் ஏராளமான வாகனங்களுக்கு எப்சி பார்க்கப்படுகிறது. கனரக வாகனங்கள், வேன், சிறிய லோடு வேன் என அனைத்திற்கும் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது எனில் ஒவ்வொரு கருவிக்கும் ரூ.3 ஆயிரம் கூடுதலாக கொடுத்து வாங்கினால், கூடுதல் பணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொடுக்கப்படுகிறது. கமிஷன் பெறுவதற்காக வாகன உரிமையாளர்களை கூடுதல் பணம் கொடுக்க வற்புறுத்துகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. கருவி இல்லாத வாகனங்களில் அனைத்து இடங்களிலும் வாங்கப்படும் கட்டுப்பாட்டு கருவியை பொருத்த வேண்டும். ஏற்கனவே இருக்கும் கருவிகளை மாற்ற வற்புறுத்தக்கூடாது என்றனர்.

Tags : Motorists ,commission ,
× RELATED மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள...