×

சிஏஏவுக்கு எதிரான போராட்டம் தீவிரம் கூடுதல் டிஜிபி அதிகாரிகளுடன் நேரில் ஆலோசனை

சேலம், பிப்.17:குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வருவது பற்றி சேலத்தில் போலீஸ் அதிகாரிகளுடன், சிறப்பு அதிகாரியான கூடுதல் டிஜிபி நேரில் ஆலோசனை நடத்தினார். முக்கிய இடங்களுக்கு சென்று ஆய்வும் நடத்தினார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 2 நாட்களுக்கு முன் சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தில், போலீசார் தடியடி நடத்தினர். இதனால், மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் தினமும் போராட்டம் நடக்கிறது.
இதனை கண்காணிக்க மண்டலம் வாரியாக சிறப்பு அதிகாரிகளை டிஜிபி திரிபாதி நியமித்துள்ளார். கோவை மேற்கு மண்டலத்திற்கான சிறப்பு அதிகாரியாக தமிழ்நாடு காவல்துறை ஆயுதப்படை கூடுதல் டிஜிபி சங்கர் ஜூவால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், கோவை மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு, உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சேலம் சரகம் மற்றும் மாநகரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் குறித்து ஆய்வு நடத்த, கூடுதல் டிஜிபி சங்கர் ஜூவால் நேற்று முன்தினம் இரவு சேலம் வந்தார். அவர், அஸ்தம்பட்டி பயணியர் மாளிகையில், உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார், எஸ்பி தீபாகனிகர், மாநகர துணை கமிஷனர்கள் தங்கதுரை, செந்தில் ஆகியோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இப்போராட்டங்களின் போது போலீசார் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி கூடுதல் டிஜிபி பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
தொடர்ந்து நேற்று, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கூடுதல் டிஜிபி சங்கர் ஜூவால் ஆய்வு நடத்தினார். அங்கு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், சரக டிஐஜி பிரதீப்குமார், எஸ்பி ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு நடத்தினார். அங்கு எஸ்பி அருளரசு உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். சேலம் சரகத்தில் சிஏஏவுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களை எவ்வாறு கையாள வேண்டும். போராட்டத்தின் போது நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். கலந்துகொள்ளும் முக்கிய நிர்வாகிகள் யார் என்ற விவரங்களையும் சேகரிக்க வேண்டும் என அவர் தெரிவித்து சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேற்று மாலை கூடுதல் டிஜிபி சங்கர் ஜூவால், சேலம் வழியே கோவை சென்றார். அங்கு இன்று(17ம் தேதி) உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தவுள்ளார்.

Tags : fight ,CAA ,
× RELATED சிஏஏ சட்டத்திற்கு இபிஎஸ்சுக்கு தெரியாமல் ஓபிஎஸ் ஆதரவு அளித்தார்