×

ஆவின் பால் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும்

சேலம், பிப்.17:ஆவின் டேங்கர் பால் லாரிகள் ஸ்டிரைக்கை, முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும், ஆவின் பால் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டம் 3வது நாளாக தொடர்கிறது. இதனால் பால் வினியோகம் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. தற்போது இருப்பு உள்ள பாலை மட்டும், பொது வினியோகத்துக்கு சப்ளை செய்து வருகின்றனர். இந்நிலை நீடித்தால், சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. சேலத்தில் 60 பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் செங்கோட்டுவேல், பொது செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அளவில் ஆவின் நிறுவனத்தில் பால் டேங்கர் லாரிகளை இயக்கி வந்த அனைவரும், அரசை மிரட்டும் வகையில் போராட்டத்தை அறிவித்து டேங்கர் லாரிகளை நிறுத்தி கொண்டனர். குறிப்பாக ஆவின் நிறுவன ஒப்பந்தத்தில் ஈடுபட அந்த நிறுவனத்திலோ, தனியார் பால் நிறுவனத்திலோ பால் டேங்கர் லாரியை 3 ஆண்டுகளுக்கு இயக்கி இருக்க வேண்டும். வாகன மாடல் 7 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். இது போன்ற நிபந்தனைகளால் புதிதாக டேங்கர் லாரி இயக்குபவர், ஆவின் ஒப்பந்தத்தில் பங்கேற்க முடிவதில்லை. இது போன்ற போராட்டத்தினால் ஆவின் நிறுவனம், பால் டேங்கர் லாரி கிடைக்காமல் தத்தளிக்கிறது.  இந்த விவகாரத்தில், தமிழக அரசு மற்றும் தமிழக முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும். பால் உற்பத்தியாளர்கள், பால் நுகர்வோர்களின் பால் கொள்முதல், விற்பனையை தங்கு தடையின்றி நடக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


Tags : Strike CM ,Aavin ,
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...