×

நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் எடைமேடை பழுதடைந்து சேதம்

நீடாமங்கலம், பிப். 17: நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் எடைமேடை பழுதடைந்து சேதமடைந்துள்ளது. இதனால் தனியாரிடம் எடை போட செல்வதால் செலவு கூடுதல் ஆகிறது.
திருவாருர் மாவட்டம் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி வட்டார பகுதிகளிலிருந்து சம்பா மற்றும் தாளடி அறுவடை செய்த நெல் மூட்டைகளை தலையாமங்கலம், மூவாநல்லூர், ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு திறந்த வெளி சேமிப்பு மையங்களில் நெல் மூட்டைகளை சேமித்து நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு லாரிகளில் கொண்டு வந்து அங்குள்ள எடை மேடையில் எடை வைத்து டன் கணக்கில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்காக அனுப்பி வருகின்றனர்.
அதே போன்று தனியார் கொள்முதல் செய்த நெல்லை அவியலுக்காக நவீன அரிசி அலை சுந்தரக்கோட்டை,மத்திய சேமிப்பு கிடங்கு பாமணி உள்ளிட்ட இடங்களில் அரவை செய்து அரிசி மூட்டைகளை நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு லாரிகளில் கொண்டு வந்து அங்குள்ள எடை மேடையில் எடை வைத்து ரயில் பெட்டிகளில்(வேகன்) தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பிவைப்பது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் நீடாமங்கலம் குட்செட் அருகில் உள்ள எடை மேடை கடந்த பல ஆண்டுகளாக பழுதடைந்து உள்ளது. இதனை கடந்த ஆண்டு சரி செய்தும் இந்த ஆண்டு பழுதடைந்து உள்ளது. தற்போது நீடாமங்கலம், மன்னார்குடி பகுதிகளில் சம்பா மற்றும் தாளடியில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அந்தந்த பகுதியில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்த நெல் மூட்டைகள் நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்து எப்போதும் அனுப்புவது போல் பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்காக வேகன்களில் அனுப்பப்பட்டு வருகிறது.
நீடாமங்கலத்திற்கு லாரிகளில் கொண்டு வரப்படும் நெல் மூட்டைகளை எடை மேடையில் எடை வைத்துதான் வேகனில் ஏற்றுவார்கள் .தற்போது எடை மேடை பழுதடைந்து உள்ளதால் லாரி ஒன்றுக்கு ரூ.70 கொடுத்து நாகை சாலையில் உள்ள தனியார் எடை மேடையில் எடை வைத்து அனுப்பப்படுகிறது. இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில் தமிழக அரசு நிதி பற்றாக்குறையில் செயல்படுவதாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.ஆனால் நாள் ஒன்றுக்கு 70 முதல் 80 லாரிகளில் நெல் மூட்டைகள் நீடாமங்கலம் குட்செட்டிற்கு தினந்தோறும் வருகிறது. லாரிக்கு ரூ.70 வீதம் தனியாரிடம் கொடுத்து எடை போட்டு நெல் மூட்டைகளை வேகன்களில் அனுப்புகின்றனர்.
தனியாரிடம் எடை வைத்து ஒரு நாள் அனுப்பு நிதியை மிச்சப்படுத்தினால் பழுதடைந்துள்ள எடை மேடையை சரி செய்து விடலாம். அரசுக்கு இந்த மாதிரியான நஷ்டங்களை அதிகாரிகள் ஏற்படுத்துகின்றனர். இதனை யாரும் கண்டு கொள்வதில்லை.இது போன்ற தேவையற்ற செலவுகளை பல்வேறு நிறுவனங்களில் தவிர்த்து அரசுக்கு வருவாயை ஏற்படுத்தினாலே ஓரளவு நிதி பற்றாகுறையை போக்கலாம். இதனை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.என்றனர்.

Tags : railway station ,Needamangalam ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!