×

வலங்கைமானில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து முஸ்லிம் அமைப்புகள், திமுக கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்

வலங்கைமான், பிப். 17: மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும், மீத்தேன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரியும் வலங்கைமான் வட்டார முஸ்லிம் கூட்டமைப்பு இயக்கங்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் இணைந்து பேரணி மற்றும் ஆர்பாட்டம் நடத்தினர்.
நிகழ்ச்சிக்கு ஆவூர் ஜமாத் தலைவர் ஹசன்பஷீர் தலைமை தாங்கினார். முன்னதாக கோவிந்தகுடி ஜமாத் தலைவர் உமர்பாட்சா வரவேற்று பேசினார். குடந்தை வட்டார ஜமாஅத்துல் உலமாசபை தலைவர் தமிமுல் அன்சாரி தொகுப்புரை வழங்கினார். திமுக ஒன்றிய செயலாளர்கள் அன்பரசன், தெட்சிணாமூர்த்தி, நகர செயலாளர் சிவநேசன், காங்கிரஸ் வட்டாரத் தலைவர் சத்தியமூர்த்தி, சிபிஐ ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ராதா, இந்தியதவ்ஹீத் ஜமாத் ரஹமத்துல்லா, ஐபிபி மாவட்ட செயலாளர் ரஹமத்அலி, எஸ்டிபிஐ மாவட்ட பொதுச்செயலாளர் இப்ராஹிம் மனிதநேய மக்கள் கட்சி மாநில செயலாளர் மைதீன்சேட்கான் உள்ளிட்ட பலரும் கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்பாட்டத்தின்போது மத்திய அரசு மற்றும் மாநில அரசைகண்டித்து ஆர்பாட்டம் செய்தனர். நாட்டின் முன்றாவது சுதந்திர போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து பேசினர். ஆர்ப்பாட்ட முடிவில் வலங்கைமான் ஜமாத் தலைவர் ஹாஜாமைதீன் நன்றி கூறினார்.
முன்னதாக ஆர்ப்பாட்ட பேரணி பாபநாசம் சாலையில் உள்ள மேலபள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு கடைவீதி, பேருந்து நிறுத்தம் வழியாக வட்டாட்சியர் அலுவலகம் அருகே முடிந்தது. பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட மூவாயிரத்திற்கு அதிகமானோர் கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்ட பலர் கருப்பு சட்டை அணிந்தும், சிலர் தேசியக்கொடி ஏந்தியும் வந்தனர். பேரணியின் போது மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டவாறும், எதிர்ப்பு தெரிவிக்கும் விதமான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் வந்தனர். ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு பேரணி இருந்தது.

Tags : organizations ,allies ,DMK ,
× RELATED பெரம்பலூரில் அம்பேத்கர் சிலைக்கு...